‘காப்பான்’ திரைப்படம் வெளியாவதையொட்டி பேனர் வைப்பதற்கு பதிலாக 150 ஹெல்மெட்டுகளை திருத்தணி சூர்யா ரசிகர்கள் மக்களுக்கு வழங்கினர்.
சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அரசியல் தலைவர்கள், நடிகர்கள் பலரும் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை பேனர் வைக்க வேண்டாம் என வலியுறுத்தினர். ‘காப்பான்’ திரைப்பட விழாவில் பேசிய நடிகர் சூர்யா, பேனர், கட் அவுட்டுகள் வைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வலியுறுத்தியிருந்தார்.
இதன் எதிரொலியாக, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் வருகின்ற 20ஆம் தேதி வெளியாக உள்ள காப்பான் திரைப்படத்திற்கு பேனர் வைக்கும் முடிவினை கைவிட்டுள்ளனர். அதற்கு பதிலாக 150 ஹெல்மெட்டுகளை வாங்கி, பொதுமக்கள் பயனடையும் வகையில் இலவசமாக வழங்கினர். மேலும் திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு தொடக்கப்பள்ளியில் பயிலும் 150 மாணவ, மாணவிகளுக்கு இலவச புத்தக பை வழங்கினர். இனி வரும் காலங்களில் சூர்யா நடித்து திரைப்படம் வெளிவரும்போது பேனர் வைப்பது தவிர்த்து, அதற்கு ஆகும் செலவினை பொதுமக்களுக்கு பயனடையும் வகையில் பயன்படுத்துவோம் என்று சூர்யா ரசிகர் மன்றத்தினர் தெரிவித்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான என்.ஜி.கே திரைப்படத்திற்கு திருத்தணி சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் 14 லட்சம் ரூபாய் செலவில் 215 அடியில் கட் அவுட் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.