சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று நடிகரும் படத்தின் தயாரிபாளருமான சூர்யா அறிவித்துள்ளார். சூர்யாவின் இந்த முடிவு சுயநலமானது என விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “திரையரங்குகள் மூடப்பட்டு 150 நாட்களுக்கு மேலாகிவிட்டது. தயாரிப்பாளர்கள் கடுமையான நேரத்தை சந்தித்து வரும் இந்த சூழ்நிலையில், திரையரங்கு ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கடும் நெருக்கடியில், சூர்யா திரையரங்கு தரப்பினரை கருத்தில் கொள்ளவில்லை என்றும், அனைவரின் வலியையும் புரிந்துகொள்ள வேண்டும், இது திரையரங்குகளை நிரந்தரமாக மூடுவதற்கான முயற்சி” என்று கூறியுள்ளார்.
மேலும், ”அவர் லாபத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார். கொரோனா முன்கள பணியாளர்களுக்கு ரூ.5 கோடி நன்கொடை அளித்தது முற்றிலும் குற்ற உணர்ச்சியற்ற செயல். ஆனால் அவருடைய வெற்றிக்கு ஒரு ஏணியாக இருந்த திரையரங்குகளை அவர் தள்ளிவிட்டார். இந்த முடிவு முற்றிலும் தவறானது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக சூர்யா வெளியிட்ட அறிக்கையில், “சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் எனது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும். படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு ரசிகர்களுடன் பார்க்க விரும்பினேன். இப்போது நிலவும் இந்த சூழ்நிலை அதை அனுமதிக்காது. ஒரு தயாரிப்பாளராக சரியான நேரத்தில் படத்தை வெளியிடுவது அவசியம்” என்று குறிப்பிட்டிருந்தார்.