நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். அப்போது மகாராஷ்டிரா அரசு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தியது. ஆனால் சுஷாந்த் சிங்கின் பெற்றோர் பீகாரில் புகார் செய்தனர். அதனால் பீகார் காவல்துறையும் மற்றொரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.
இதனால் மகாராஷ்டிரா - பீகார் அரசுகளுக்கிடையே பரபரப்பு நிலவி வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட பிரச்னை வலுத்தது. இதனிடையே சுஷாந்தின் பெற்றோர் சிபிஐ விசாரணை தேவை எனவும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். பீகார் காவல்துறையும் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்தது. மத்திய அரசு இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டது.
ஆனால் சுஷாந்தின் காதலி ரியா சிபிஐ விசாரிக்கக் கூடாது என தெரிவித்திருந்தார். மகாராஷ்டிரா அரசும் நாங்கள்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தோம். அதனால் பீகார் அரசு முதல் தகவல் அறிக்கையை ஏற்றுக்கொள்ள கூடாது. சிபிஐ விசாரணைக்கு நாங்கள் பரிந்துரை செய்தால்தான் மத்திய ஏற்க முடியும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகார் அரசின் முதல் தகவல் அறிக்கையையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு 35 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.