நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
சென்னையிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் மூலமாக தோஹா சென்று, அங்கிருந்து வேறு விமானம் மூலமாக அமெரிக்கா சென்றார். அங்கு ரோசெஸ்டர் (Rochester) நகரில் உள்ள மயோ கிளினிக் (Mayo Clinic) மருத்துவமனையில் ரஜினிகாந்திற்கு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் ரஜினிகாந்திற்கு இரண்டாவது முறையாக மயோ கிளினிக் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ குழுவினர் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இதன்பின் குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள ரஜினிகாந்தை மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி 2019 ஆம் ஆண்டு ரஜினிகாந்திற்கு மருத்துவ பரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான வேலையில் இருந்ததால் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவில்லை. அதேபோல் கடந்த ஆண்டும் கொரோனா தாக்கம் அதிகம் இருந்ததால் அவரின் மருத்துவ பயணம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்ட ரஜினிகாந்த் அரசின் சிறப்பு அனுமதி பெற்று அமெரிக்கா சென்றுள்ளார். சென்னையிலிருந்து ரஜினிகாந்த் மட்டும் அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்காவில் ஏற்கெனவே ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் மற்றும் பேரன்கள் உள்ளனர். அவர்கள் அங்கு ரஜினிகாந்துடன் இணைந்து கொள்ள உள்ளனர். மருத்துவ பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கிய பின்பு சென்னை திரும்ப உள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் பரிசோதனை செய்து கொள்ளவிருக்கும் மயோ கிளினிக் (Mayo Clinic) மருத்துவமனை சென்னையிலிருந்து 14 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலும், நியூயார்க் நகரிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவிலும், நயகரா நீர் வீழ்ச்சியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அமெரிக்காவில் மிகச் சிறந்த மருத்துவமனையாக அறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.