எவ்வளவு கவனமாக இருந்தாலும், சில நேரங்களில் சூழ்நிலை சூழ்ச்சி செய்துவிடும். அந்த விதிக்கு அஜீத்தின் திரைவாழ்வில் சில உதாரணங்கள் இருக்கின்றன. அவருக்கான கதையை அவர் மட்டுமே கேட்பார், அவர் மட்டுமே மறுப்பார். அப்படி நடிக்க மறுத்த சில படங்கள் மற்ற நாயகர்களின் நடிப்பில் பெரிய வெற்றியைப் பெற்றன.
இயக்குநர் பாலசேகரன் முதலில் ‘லவ் டுடே’கதையை அஜித்துக்குச் சொன்னார். அவருக்குப் பிடிக்கவில்லை. பிறகு அந்தக் கதை விஜய்க்கு போனது. படம் வெற்றி. ‘ரன்’ கதையை அஜித்துக்கு சொன்னார் லிங்குசாமி. திருப்தியடையாத அஜித், அந்தக் கதையை மறுத்துவிட்டார். மாதவனுக்கு அடித்தது அதிர்ஷ்டம். படம் சூப்பர் டூப்பர் வெற்றி. பாலாவின் படத்தில் நடிப்பதற்கு முன்னணி நாயகர்கள் போட்டி போட்ட காலகட்டம் அது. அவரது ‘நந்தா’ கதை முதலில் அஜித்துக்குத்தான் சொல்லப்பட்டது. கதை பிடிக்காததால் அஜித் பிடிகொடுக்கவில்லை.
அந்தக்கதையில் நடிக்க சூர்யா சம்மதித்தார். நந்தா சூர்யாவின் திரைவாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. சரண் இயக்கத்தில், ஏவி.எம் தயாரிப்பில் உருவான படம் ‘ஜெமினி’. இப்படத்தின் கதை முதலில் அஜித்துக்குத்தான் விவரிக்கப்பட்டது. ஏனோ இந்தக் கதையும் அஜித்துக்கு பிடிக்காமல் போனது. கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வெற்றி பெற்றார் விக்ரம். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘கஜினி’ படக்கதையை ஆரம்பத்தில் கேட்டவர் அஜித். தவிர்க்க இயலாத காரணத்தால் நடிக்க முடியவில்லை. அதில் நடித்த சூர்யாவுக்கு அகில இந்திய அங்கீகாரம் கிடைத்தது.
‘போலீஸ் ஸ்டோரி’ என்ற பெயரில் கவுதம் வாசுதேவ் மேனன் சொன்ன கதையில் அஜித்துக்கு நாட்டமில்லை. விலகிக்கொண்டார். அது ‘காக்க காக்க’ என்ற பெயர் மாற்றத்துடன் சூர்யா நடிப்பில் வெளியாகி, காப்ஸ் படங்களின் கேப்டன் என்ற பெயரைப் பெற்றது.
உலக அதிசயங்கள் உள்ள இடங்களிலெல்லாம் படப்பிடிப்பு நடத்தப்பட்ட ‘ஜீன்ஸ்’ படத்தின் கதையை முதலில் அஜித்துக்கு சொன்னார் இயக்குநர் ஷங்கர். அதிசயம் எதுவும் அஜித்தை ஈர்க்கவில்லை. அந்தப்படம் பிரஷாந்த் திரைவாழ்வில் முத்திரையானது. ‘கில்லி’கதையை தரணியிடம் கேட்ட அஜித், அது ரீமேக் படம் என்கிற காரணத்தைச் சொல்லி தவிர்த்துவிட்டார். ஒப்புக்கொண்டு நடித்த விஜய்யின் திரைவாழ்வில் அந்தப்படம் மிகப்பெரிய ஆக்ஷன் மூவியாக கொண்டாடப்பட்டது.