அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள்: விஜய்யின் 'அரசியல்' ப்ளான் என்ன?

அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள்: விஜய்யின் 'அரசியல்' ப்ளான் என்ன?

அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள்: விஜய்யின் 'அரசியல்' ப்ளான் என்ன?
Published on

நடப்பு தேர்தல் களத்தில் விஜய் பங்களிப்பு எந்த விதத்திலும் இருக்காது என்பது உறுதி என்றாலும், விஜய் அவ்வப்போது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது அரசியல் ரீதியில் கவனம் பெற்றுள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாத தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. திராவிட கட்சிகள் ஒருபுறம் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு முன்னரே தேர்தல் பரப்புரையை தொடங்கிய கமல், திராவிட கட்சிகளின் அரசியல் குறைகளை மக்களிடம் எடுத்துரைத்தும், தனது மாற்று பார்வையை முன்வைத்தும் மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டே தான் அரசியலுக்கு வருவது உறுதி என கூறிய நடிகர் ரஜினிகாந்த், டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்க போகும் அறிவிப்புக்காக கட்சி கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, விஜயின் தந்தை எஸ்.ஏ.சியும் “விஜய் மக்கள் இயக்கம்”என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சி பெயரை பதிவு செய்த நிலையில், இதற்கு நடிகர் விஜய் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததின் அடிப்படையில் அந்த முயற்சி கைவிடப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.

இந்தத் தேர்தல் களத்தில் விஜய் பங்களிப்பு எந்த விதத்திலும் இருக்காது என்பது உறுதி என்றாலும், விஜய் அவ்வப்போது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திப்பது, ஆலோசனை நடத்துவது போன்ற செயல்பாடுகள் அரசியல் களத்தில் கவனம் பெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாகதான் நேற்றும் தனது பனையூர் இல்லத்தில் காணொலி வாயிலாக மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய், “இயக்க நிர்வாகிகள் யாரும் மாற்றுக் கட்சியில் சேர வேண்டாம். நீங்கள் நினைப்பது போல் அனைத்தும் விரைவில் நடைபெறும்” என்று கூறியதாக சொல்லப்பட்டது, தற்போது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.

அதன் வழியாக அவரின் அரசியல் நிலைப்பாடு என்ன, அவரது அரசியல் வருகை எப்போது இருக்கும், அதற்காக அவர் எடுத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் என்னென்ன என்பதை அறிய சினிமா விமர்சகர் பிஸ்மியை தொடர்பு கொண்டு பேசினோம்.

இது குறித்து அவர் கூறும்போது, “ஒரு சாதரண நடிகருக்கும், அரசியலுக்கு வர இருக்கும் நடிகருக்கும் வித்தியாசம் இருக்கிறது. காரணம், சாதாரண நடிகரின் ரசிகர்கள் அந்த நடிகரின் படங்களை எதிர்பார்த்து காத்திருப்பர். ஆனால் அரசியல் வருகையை வெளிப்படுத்தும் ரசிகர்கள் அவரது படங்களை மட்டுமல்லாது, அரசியல் வருகையையும் எதிர்பார்த்து காத்திருப்பர். அந்த வகையில் ரஜினி, கமல் தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், விஜய் ரசிகர்களும் அவ்வகையான முடிவை விஜயிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். ஆனால், விஜயின் டார்கெட் 2026 சட்டமன்ற தேர்தல்தான். ஆனால், அதற்கிடையே இயக்க நிர்வாகிகள் பிற கட்சிகளுக்கு தாவி விடாமல் இருப்பதற்கான நடவடிக்கையே இந்த சந்திப்புகள்” என்றார்.

மேலும் கூறிய அவர், “ஆனால் பெரும்பான்மையான இந்தச் சந்திப்புகளுக்கு விஜய் நேரில் வருவதில்லை. அவர் சார்பாக அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் புஸ்சி ஆனந்த் தான் சந்திப்புக்களுக்கு தலைமை தாங்கி விஜய் கூறிய தகவல்களை நிர்வாகிகளுக்கு கடத்துகிறார். இது மட்டுமல்லாது விஜயின் தந்தை எஸ்.ஏ.சி சந்திரசேகர் வெறொரு பெயரில் கட்சி தொடங்க இருப்பதாகவும், அந்தக் கட்சியை அதிமுக உடன் இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அப்படியிருக்கும் பட்சத்தில், இயக்க நிர்வாகிகள் அந்தக் கட்சிக்கு செல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கையாகவும் இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது” என்றார்.

விஜயின் டார்கெட்டிற்கு அவர் எடுத்துக்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் என்னென்ன என்று கேட்டதற்கு, "பூத் கமிட்டியில் இருக்கும் உறுப்பினர்களை அவ்வப்போது சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். இது தனது அரசியல் வருகைக்காக உறுப்பினர்களை தயார்ப்படுத்தும் உத்திதான். மற்றபடி அவர் அரசியலில் களம் இறங்குவதற்கான எந்த நடவடிக்கையையும் தற்போது எடுக்கவில்லை" என்றார்.

நடிகர்களின் அரசியல் வருகை மீது எழும் விமர்சனங்கள் குறித்து அவர் கூறும்போது, "நடிகர்களுக்கு அரசியல் தொலைநோக்கு பார்வை கிடையாது. நடிகருக்கு கல்வி, அரசியல், விவசாயம் உள்ளிட்ட பலப் பிரிவுகளில் ஒரு தெளிவு இருக்க வேண்டும். எந்த நடிகர் அவரது ரசிகருக்கு அரசியலை கற்றுக்கொடுத்திருக்கிறார். அரசியலுக்கு வரும் நடிகர் அவரது ரசிகர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை உண்டாக்க வேண்டும். இரண்டு வருடத்திற்கு ஒரு முறை அரசியல் ஆளுமைகளின் கீழ் ரசிகர்கள் வரவழைத்து பேச்சரங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் ரசிகர்கள் அறிவாளியாக மாறுவார். காரணம் இன்றைய ரசிகன்தான் நாளைய தொண்டன். அந்த தொண்டன்தான் அடுத்த தலைமுறையின் தலைவன்.

ஆனால், இங்கு எந்த நடிகரும் தனது ரசிகர் அறிவாளியாக இருப்பதை விரும்புவதில்லை. காரணம், ரசிகன் அறிவாளியாக மாறும் பட்சத்தில், நடிகருக்கான கைத்தட்டல்கள் குறையும். இன்று ரஜினியை எடுத்துக்கொள்ளுங்கள், விவசாயப் பிரச்னை சம்பந்தமாக இதுவரை ஏதாவது கருத்தை முன் வைத்திருக்கிறாரா? இல்லையே... கமலின் பேச்சு குழப்பத்திலேயே இருக்கிறது.

இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம், ரசிகர்கள் ஓட்டு போடுவதால் மட்டும், நடிகர் அரசியலில் வென்று விட முடியாது. காரணம், ரசிகர்கள் சில லட்சம் பேர்தான். பொதுமக்கள் வாக்களிக்கும் பட்சத்தில் மட்டுமே எந்த ஒரு தலைவரும் அரசியலில் வெல்ல முடியும். ஆகையால் இவர்கள் வெற்றியை கைப்பற்ற முடியாது” என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com