``மதங்களைப் பற்றி பேசுவது சினிமாவுக்கு தேவை இல்லாதது”- ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேச்சு
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், சினிமா நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “யாரும் மதங்களை தப்பாக சித்தரித்து படங்களை எடுக்காதீர்கள்” என்றார்.
எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் நடன வடிவமைப்பாளர் தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் படம் 'லோக்கல் சரக்கு'. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் படக்குழுவினரான இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார், தினேஷ், உபாஸ்னா, இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ஜீவா, சென்ட்ராயன் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் தேனப்பன் மற்றும் சண்டைப் பயிற்சியாளர் கனல்கண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய பலரும் திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். கனல் கண்ணன் பேசும் போது "முன்பு இதே படத்துக்கான ஒரு மேடையில், மூத்த தயாரிப்பாளரொருவர் `புதிதாக யாரும் படம் எடுக்க வரவேண்டாம்’ என்பது போல பேசினார். அது மனதுக்கு வேதனையாக இருந்தது. புதிதாக படம் எடுப்பவர்கள் ஜெயித்துக் கொண்டு இருக்கும் துறை இது. நல்ல படங்கள் எப்போதும் வரவேற்கப்படும். ஒரு படம் எடுக்கும் போது பல குடும்பங்களுக்கு வருமானம் கிடைக்கும். அவர் அப்படிப் பேசும் போது தடுத்து யாரும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள் என்பது இன்னொரு பக்கம்.
சரி இப்போது லோக்கல் சரக்கு படம் பற்றி வருவோம். இந்தப் படத்தை எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருக்கிறார். அவர் மிகத் திறமையான மனிதர். `நாட்டாமை’ படத்தின் காமெடி ட்ராக்கை எழுதியதே அவர் தான். பல படங்கள் எடுத்துவிட்டு இப்போது இந்தப் படம் இயக்கியிருக்கிறார். இதிலும் அவர் வெற்றியடைய வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம், மதங்களைப் பற்றி பேசுவது இப்போது ஒரு ஸ்டைல் ஆகிவிட்டது. அது சினிமாவுக்கு தேவை இல்லாதது. யாரும் மதங்களை தப்பாக சித்தரித்து படங்களை எடுக்காதீர்கள். யாராவது மதங்களை தப்பாக படமாக்கினால், அதில் பாதிக்கப்பட்டவன் அங்கங்கே வாழ்ந்து கொண்டுதான் இருப்பான்" என்று பேசினார்.