'நட்பின் கரங்களால் பலம்' - கொரோனாவை வென்ற வசந்தபாலன், ரோஹிணி!

'நட்பின் கரங்களால் பலம்' - கொரோனாவை வென்ற வசந்தபாலன், ரோஹிணி!
'நட்பின் கரங்களால் பலம்' - கொரோனாவை வென்ற வசந்தபாலன், ரோஹிணி!
Published on

உலகம் முழுக்க பேரச்சத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் கொரோனாவை வெல்ல, மருத்துவமும் மனோபலமும் அவசியம் என்பது அனைவருக்கும் தெரியும். அதேநேரம், நட்பிற்கும் அதற்கிணையான வல்லமை இருப்பதாக நடிகை ரோகிணியும், இயக்குநர் வசந்த பாலனும் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். 

இயக்குநர் வசந்தபாலனுக்கு ஏப்ரல் 21-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுக்கலாம் என்கிற முடிவில் இருந்தவருக்கு, நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்படைந்திருந்ததால், வசந்தபாலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு, தற்போது அவர் குணமடைந்து திரும்பியிருக்கும் நிலையில், தன் நண்பர் வரதராஜனே மருத்துவத்திற்கு இணையான நபராக இருந்து தன்னைக் கவனித்துக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கு காரணம்  வசந்தபாலனுக்கு தேவைப்பட்ட மருத்துவ உதவிகள் அனைத்தையும் வெளியிலிருந்து செய்தவர் அவரே.

வசந்தபாலன் மட்டுமின்றி அவரது மனைவிக்கு தொற்று ஏற்பட்டிருந்ததால், அவர்கள் குழந்தைகளையும் தனிமைப்படுத்தி பாதுகாப்பாக வரதராஜனே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரோடு, மருத்துவச் செலவு, மருந்து கிடைக்க உதவி என பல நண்பர்களும் வசந்தபாலனுக்கு உதவியிருக்கிறார்கள். இதுகுறித்து, ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், நட்பின் கரங்கள் எனை, அன்பின் சிப்பியில் அடைகாத்து அருளியதால், சுகமாய் இல்லம் திரும்பியிருக்கிறேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

வசந்தபாலனைப் போலவே, கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்றதில் தொடங்கி மீண்டும் வீடு திரும்பியது வரை எல்லாமுமாக தன் நண்பர்களே இருந்ததாக நடிகை ரோஹிணி பதிவிட்டு இருக்கிறார்.

ஏப்ரல் 27ம் தேதி நடிகை ரோகிணிக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோஹிணிக்கு, வெளியில் இருந்து பிரளயன், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், செல்வா என பல நண்பர்கள் உதவியதாக குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார். அவர் பதிவிட்ட அந்தப் பதிவில்,” என் தோழர்கள் என்னோடு இருப்பது எவ்வளவு பெரிய பலம் என்பது எனக்கு மட்டுமே தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

இயக்குநர் வசந்தபாலன், நடிகை ரோஹிணியைப் போலவே நட்பெனும் அருமருந்தின் துணையோடு கொரோனாவை வென்றவர்கள் பலர் இருக்கிறார்கள். 'இடுக்கண் களைவதே நட்பு' என ஐயன் வள்ளுவன் சொன்னதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் எக்காலத்திற்குமான சான்று.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com