செய்தியாளர் ராம் பிரசாத்
ஒரே வருடத்தில் பதான், ஜவான் என இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் கொண்ட படங்கள். அடுத்ததாக ராஜ்குமார் ஹிரானியுடன் உறுதியாக ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையோடு டங்கி என 59 வயதிலும் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறார் ஷாருக் கான்.
உலகின் கண்களில் ஷாருக் தான் இந்திய சினிமாவின் அடையாளம். மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் பாலிவுட்டை கட்டி ஆளும் ஷாருக், அந்த கனவு உலகில் கால் வைத்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான்.
ஷாருக் பிறந்து வளர்ந்ததெல்லாம் டெல்லி தான். ஒரு முறை அவரின் காதலியுடன் சண்டை ஏற்பட்டிருக்கிறது. பேசாமல் இருந்த காதலியை தேடிக் கொண்டு முதல் முறையாக நண்பர்களுடன் மும்பை வந்திருக்கிறார். அப்போது மும்பையில் இருந்த ஒவ்வொரு பீச்சாக சென்று தேடித் திரிந்து கடைசியில் தன் காதலியைக் கண்டுபிடுத்திருகிறார் ஷாருக். அவர்தான் ஷாருக்கின் மனைவி கெளரி. இப்படி அலைக்கழிப்பாகத்தான் ஷாருக்கிற்கு முதலில் மும்பை அறிமுகமாகியிருக்கிறது. ஆனால் இன்று அந்த மும்பைக்கு அவரையும், அவருக்கு மும்பையையும் அடையாளமாக்கியிருக்கிறது காலம்.
சிறுவயதில் இருந்து ஷாருக்கானுக்கு திரைத்துறையில் ஆர்வம். இவர் முதலில் தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஆரம்பித்த நிலையில், அதில் வந்த கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத்தொடர்ந்து அவர் ஆங்கிலத் தொலைக்காட்சி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
சற்றும் எதிர்பாராத விதமாக அவருக்கு தில் அஸ்னா ஹா என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஷாருக், மும்பைக்கு சென்றார். 1992ஆம் ஆண்டு தீவானா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
தொடர்ந்து பாசிகர், தர், கரண் அர்ஜுன், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, குச் குச் ஹோதா ஹை, தேவதாஸ், ஸ்வதேஸ், சக் தே இந்தியா போன்ற படங்களில் நடித்து பாலிவுட்டின் பாட்ஷாவாக மாறினார். திரைப்படங்களில் மட்டும் நடிக்காமல் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினர்.
ஷாருக் என்கிற இந்த மனிதர் மீது அத்தனை கோடி பேர் அன்பு செலுத்த அந்த திரைப்பிம்பம் மட்டுமே காரணமில்லை. அதைத் தாண்டி தன்னை யதார்த்தமாக நிறுத்திக் கொள்ளும் தன்மைதான் அவரை சுற்றி இவ்வளவு இதயங்கள் குவிய காரணமாக இருக்கிறது.
"கடலை பார்க்கிறதுதான் எனக்கான பெரிய விடுதலை... நீ இந்த உலகத்துக்கு ஒரு பொருட்டே இல்லை என்கிறதை கடல் தான் எனக்குக் கற்றுக்கொடுத்தது". இது ஷாருக்கான் உதிர்த்த வார்த்தைகள். இந்த இயல்பை இழக்காத வரை அவர்தான் உலகின் கண்களுக்கு இந்திய சினிமாவின் ஆசை முகம்.