”தி பேமிலி மேன் 2 தொடரை நிறுத்துங்கள் இல்லையேல்..” - இயக்குநர் பாரதிராஜா கண்டனம்

”தி பேமிலி மேன் 2 தொடரை நிறுத்துங்கள் இல்லையேல்..” - இயக்குநர் பாரதிராஜா கண்டனம்
”தி பேமிலி மேன் 2 தொடரை நிறுத்துங்கள் இல்லையேல்..” - இயக்குநர் பாரதிராஜா கண்டனம்
Published on

‘தி பேமிலி மேன் 2’ தொடர் ஒளிப்பரப்பை அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து நிறுத்த வேண்டும் எனக் கூறி இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ எங்கள் இனத்திற்கு எதிரான ‘தி பேமிலி மேன் 2’ இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர்  திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லீம்,வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.

தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை
கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக,  ‘தி பேமிலி மேன்’ தொடர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து அதன் 2 பாகமும் அண்மையில் வெளியானது இதில் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தத்தொடரில் இலங்கை தமிழ் போராளிக்குழுக்களை தவறாக சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில், இந்தத்தொடரை தடை செய்ய வேண்டும் என பல பிரபலங்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக கூறி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com