ராஜன் ஷாஹி இயக்கத்தில் அனுபமா என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை ருபாலி. இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பை பின்பற்றுவதாகவும், அவருடைய சாயல் இருப்பதால் அவரை நினைவுபடுத்துவதாகவும் இருக்கிறது.
நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான நேற்று அவருடனான தனது அனுபவத்தை ருபாலி பகிர்ந்துகொண்டார்.
மிகப்பெரிய நட்சத்திரமான ஸ்ரீதேவியுடன் தனது நடிப்பை ஒப்பிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நடிப்பில் அவர் ஒரு தேவதைக்கு நிகரானவர். அவருடைய மிகப்பெரிய ரசிகை நான். குழந்தைப் பருவத்திலிருந்தே, ‘நாகினா’, ’சல்பாஸ்’ மற்றும் ‘மிஸ்டர் இந்தியா’ போன்ற படங்களை கணக்கற்ற முறை பார்த்து வியந்திருக்கிறேன். அவருடைய நடிப்புதான் என்னையும் நடிகையாக தூண்டியது. என்னுடைய காலகட்டத்தில் இருக்கும் அனைத்து நடிகர்களுக்குமே ஸ்ரீதேவி ஒரு ரோல்மாடல்தான்.
எனது தந்தை அனில் கங்குலி ஒரு பிரபல இயக்குநர் என்பதால் சிறிய வயதிலிருந்தே நிறைய நடிகர் நடிகைகளை பார்த்து வளர்ந்தேன். பார்ட்டிகள் மற்றும் விழாக்களில் யாருடனும் போட்டோ எடுத்ததில்லை. ஆனால் ஸ்ரீதேவியுடன் மட்டும் எடுத்திருக்கிறேன். ’ஜோஸ்லே’ திரைப்பட செட்டில் ஸ்ரீதேவியைப் பார்த்தபோது, எனது தலையை தடவிக்கொடுத்தார். அதனால் நீண்ட நாட்களாக தலைக்கு குளிக்காமல் இருந்தேன்.
சில வருடங்களுக்கு முன்பு ஒரு விருது விழாவில் அவரை சந்தித்தபோது, அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளட்டுமா என கேட்டேன். மேலும் நான் எப்படி நடிக்கவந்தேன் என கூறினேன். என்னுடைய ‘சாராபாய் vs சாராபாய்’ ஷோவை அவரும் பார்ப்பதாகக் கூறினார். நான் மேகத்தில் மிதந்துவிட்டேன்.
அவர் இறந்ததை கேட்டபோது மனமுடைந்து அழுதேன். நேரில் சென்று மரியாதை செலுத்தினேன். சமீபத்தில், மிஸ்டர் இந்தியா படத்தில் மிகவும் பிரபலமான ‘ஹவா ஹவாய்’ பாடலுக்கு, அனுபமா தொடரில் ஆடினேன். இதற்கு இயக்குநர் ராஜனுக்கு பலமுறை நன்றி கூறினேன். ரசிகர்கள் ஸ்ரீதேவியுடன் எனது நடிப்பை ஒப்பிடுவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக கருதுகிறேன்’’ என்கிறார் ருபாலி.