ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை உலகமெங்கும் 7000 திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
இதனிடையே ‘தர்பார்’ படத்தின் அனுமதி பெறாத கூடுதல் காட்சிகளுக்கு, தடைவிதிக்க வலியுறுத்தி தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதில், தமிழக அரசு விதிமுறைப்படி விடுமுறை காலங்களில் அனுமதி பெற்று 5-வது காட்சியை காலை 9 மணிக்கு மட்டுமே திரையரங்குகளில் திரையிட முடியும். ஆனால் சென்னையில் உள்ள திரையரங்குகள் 6-வது காட்சி மற்றும் 7-வது காட்சி என்று நள்ளிரவு 1.00 மணி முதல் விடியற்காலை 4.00 மணி 5 மணி 6 மணி 7 மணி என்று திரையிட உள்ளார்கள். இந்நிகழ்வை தடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட அனைவரின் திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது எனவும் முறையான அனுமதி கோரினால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தர்பார் படத்தின் சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 9, 10, 13, 14 ஆகிய நான்கு நாட்களுக்கு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.