”வைரமுத்துவை கடைசிவரை எதிர்த்துக்கொண்டேதான் இருப்பேன்” - சின்மயி சிறப்புப் பேட்டி

”வைரமுத்துவை கடைசிவரை எதிர்த்துக்கொண்டேதான் இருப்பேன்” - சின்மயி சிறப்புப் பேட்டி
”வைரமுத்துவை கடைசிவரை எதிர்த்துக்கொண்டேதான் இருப்பேன்” - சின்மயி சிறப்புப் பேட்டி
Published on

கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்ட ஓ.என்.வி இலக்கிய விருதை பாடகி சின்மயி, நடிகை பார்வதி உள்ளிட்ட பலர் எதிர்த்ததால் ’மறுபரிசீலனை செய்யப்படும்’ என்று அறிவித்தது கேரளாவின் ஓ.என்.வி கல்சுரல் அகாடமி. இதனால், 'அந்த விருதை திருப்பி அளிக்கிறேன்' என்று வைரமுத்து அறிவித்ததால் விருது சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதேசமயம், பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியரின் பாலியல் வழக்கை திசை திருப்பவே  வைரமுத்துவின் விருது குறித்து சின்மயி விமர்சித்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டும் கிளம்பியது. பாடகி சின்மயியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஓ.என்.வி விருதை திருப்பி அளிக்கிறேன் என்றிருக்கிறாரே வைரமுத்து?

     “வைரமுத்துவுக்கு ஓ.என்.வி விருது வழங்கக்கூடாது என்று நான் மட்டுமல்ல, தேசியளவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கேரளாவில் இருக்கும் ’வுமன் சினிமா கலெக்ட்டிவ் (wcc) அமைப்பினரும் எங்கள் பக்கம் நின்றார்கள். தொடர்ச்சியான எதிர்ப்பால் ’விருது  மறுபரிசீலனை செய்யப்படும்’ என்று அறிவித்தது ஓ.என்.வி கல்சுரல் அகாடமி. அப்போதே, விருது கொடுக்கமாட்டார்கள் என்பது தெளிவாகிவிட்டது. ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக நடந்துகொள்கிறார் வைரமுத்து. ஓ.என்.வி விருதை கொடுத்திருந்தால் கேரள அரசிற்கே அவமானம் ஆகியிருக்கும். அவர்களே ‘நீங்களே திருப்பியளிக்கிறேன்’ என்று சொல்லிவிட சொல்லும்போது, வராத விருதையும், வராத பணத்தையும் திருப்பிக் கொடுக்கிறேன் என்கிறார். அந்தப் பணத்தோடு, 2 லட்ச ரூபாய் நிவாரண நிதி வேறு அளிக்கிறார். எல்லாவற்றையும் பணத்தால் அடித்து மறைக்க நினைக்கிறார். ’கலைஞனையும் படைப்பையும் பிரித்து வைத்துப் பார்க்கவேண்டும்’ என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. கருவாச்சி காவியத்துக்கு கை, கால்கள் முளைத்தா போய் விருது வாங்குகிறது? வைரமுத்துதானே வாங்குகிறார்?” 

ஆனால், தமிழகத்தில் பிஎஸ்பிபி உள்ளிட்ட முக்கியமான பிரச்னைகள் நடக்கும்போது வைரமுத்துவுக்கான விருது அறிவிப்பை வைத்து, பிரச்னையை திசை திருப்புகிறீர்கள் என்ற விமர்சனம் உங்கள் மீது உள்ளதே?

     “இந்தியாவில் ’மீ டூ’ இயக்கத்தால் முதன்முதலில் பதவி பறிபோனது அப்போதைய பாஜக வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே அக்பருக்குத்தான். ராஜினாமா செய்தார். பாஜகவை சேர்ந்தவர்தானே மீ டூ இயக்கத்தால் அடிவாங்கியது. பிஎஸ்பிபி பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காக முதன்முதலில் நான்தான் குரல் கொடுத்தேன். பாதிக்கப்பட்ட பெண் பதிவிட்டவுடன், அன்றிரவே என்னுடைய இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் பதிவிட்டேன். அப்போது, அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அதன்பிறகுதான், கனிமொழியிலிருந்து மற்ற பலரும் பதிவிட்டார்கள். இதனையெல்லாம், பார்க்காமல் மொத்தமாக என்மீதே பழி சுமத்தி எப்படி இவர்களால் பொய் சொல்ல முடிகிறது?”.

ஆனால், சாதி ரீதியாக பிஎஸ்பிபி பள்ளி பிரச்னையை அணுகாதீர்கள் என்று சொன்னது பற்றி விவாதம் எழுந்ததே...

    “பிஎஸ்பிபி பள்ளியை மட்டும் எல்லோரும் ஏன் இழுக்கவேண்டும்? வேறு பிரபலமான பல பள்ளிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளதையும் பேசவேண்டியதுதானே? இவர்களுக்கு பிஎஸ்பிபி பள்ளி மட்டும்தான் பிரச்னையாக உள்ளது. குழந்தைகள் மேல் நடக்கும் பாலியல் பிரச்னைகள் குறித்து அல்ல. பாலியல் குற்றவாளிகளுக்கு குடை தூக்கும் சமூகமாகத்தான் நமது சமூகம் இருக்கிறது. மதுவந்திக்கும் பிஎஸ்பிபி பள்ளிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. இது தெரியாமல் சாதி, மதுவந்தி என்று பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகத்தை விட்டுவிட்டு மற்ற எல்லோரையும் கேள்வி கேட்கிறார்கள். இதனைக் கேட்டால், என்னை பார்ப்பனிய பெண் சின்மயி மதுவந்திக்கு ஆதரவாக பேசுகிறார் என்கிறார்கள்.

பாலியல் கொடூரத்தை ஏன் சாதி ரீதியாக கொண்டுசெல்ல வேண்டும்? சாதி ரீதியாக மதரீதியாக கொண்டு சென்றால் பாதிக்கப்பட்டக் குழந்தைகளுக்கு நியாயம் கிடைக்காது. ஒட்டுக்கப்பட்ட பெண்களுக்குத்தான் பாலியல் துன்புறுத்தல் என்பது சாதி ஆதிக்கத்தாலும் வரும். அதனைத்தான் சாதிரீதியாகவும் நாம் கருதவேண்டும்.”

ஆனால், பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகத்தினர் ஏற்கெனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை கொண்டுள்ளார்களே?

     “பிஎஸ்பிபி நடவடிக்கை எடுக்காதது மிகப்பெரிய தவறு. இவர்கள் மட்டுமல்ல. வேறு சில பிரபல பள்ளிகளிலும் பாலியல் கொடுமைகள் நம் கண்ணெதிரில் நடக்கிறதே, அங்கெல்லாம் செல்லாமல் ஏன் நேரடியாக பிஎஸ்பிபி பள்ளியை மட்டும் குறிவைக்க வேண்டும்? இதே, பல தனியார் பள்ளிகளிடம் ’பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து துறை சார்ந்தவர்கள் மூலம் மாணவிகளுக்கு  விழிப்புணர்வு கொடுங்கள்’ என்றேன். அப்போல்லாம் ’அய்யய்யோ அதெல்லாம் வேண்டாம். அசிங்கமான பழக்கங்களை எங்கப் பசங்களுக்கெல்லாம் நீங்க கத்துக்கொடுக்க வேண்டாம்’ என்றார்கள். இப்போ என்னாச்சி? ”

அதேபோல, வைரமுத்துவை பழிவாங்குகிறீர்கள் என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறதே?   

“ பழிவாங்குறேனா?  ராதாரவி, நயன்தாராவை விமர்சித்தபோது நான் கண்டித்தேன். அதே ராதாரவியை வைத்து வானதி சீனிவாசன் பிரசாரம் செய்தபோது, ‘இவரை அழைத்துதான் பிரசாரம் செய்யவேண்டுமா?’ என்று கேட்டேன். உனனாவ் சிறுமி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காருக்கு பாஜக ஏன் சீட் கொடுத்தது?  என்று கேட்டேன். திஷா ரவி கைதுக்காக பாஜகவை  விமர்சித்தற்கு, இதே பாஜகவினர் என்னை கடுமையாகத் திட்டி வைரமுத்துவுக்கு ஆதரவாகப் பேசினார்கள். இதெல்லாம், இவர்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்காகவும்தான் நான் குரல் கொடுக்கிறேன். ’மீ டூ ’ மூவ்மென்ட்டுக்குப் பிறகு என்னைப்போல பல பெண்கள் புகார் அளித்தப்பின் நடவடிக்கையே எடுக்கவில்லை. ஆனால், பிஎஸ்பிபி விஷயத்தில் எந்த கம்ப்ளைன்டும் கொடுக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்களே? சின்மயிக்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? அப்போ, இவர்களுக்கு வைரமுத்து மட்டும் முக்கியம்?”

’தமிழ் சமூகத்தின் மீதான தாக்குதல்’ என்று பாரதிராஜா, வைரமுத்துவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?

   “இத்தனைப் பெண்கள் குற்றச்சாட்டு சொன்ன வைரமுத்துதான் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்குப் பிரதிநிதியாக வேண்டுமா? பாரதிராஜா சார், வைரமுத்துவுக்கு நண்பர் என்பதால் சப்போர்ட் செய்கிறார். அவரை நம்பி தமிழ் சமூகம் வைரமுத்துவை தப்பிக்க வைக்கப் பார்க்கிறது. பாரதிராஜா சாருக்கு மடியில் கனம் என்று நினைகிறேன். நாளைக்கு இவருக்கு பிரச்னை வந்தால் வைரமுத்து சப்போர்ட் பண்ணுவாரல்லவா? பாஜக அமைச்சர் எம்.ஜி அக்பர் மேல் 20 பெண்கள் பாலியல் குற்றம்சாட்டினார்களே? இஸ்லாமிய சமூகம் மீது தாக்குதல் என்று கேள்வி எழுப்பினார்களா?

எனது பிரச்னையை சாதி ரீதியாக எடுத்துக்கொண்டு போவது வைரமுத்துவை காப்பாற்றுவதற்காகத்தான். அரசியல் பலம், அரசியல் செல்வாக்கு அனைத்தையும் தவறாக பயன்படுத்தும் வைரமுத்துவின் படைப்புகளுக்கு இலக்கியவாதிகள் மத்தியில் செல்வாக்கு இல்லை.”

இப்படியே தொடர்ந்தால் இப்பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

     “வைரமுத்து ஒரு பாலியல் குற்றவாளி என்பதால் நான் கடைசிவரை வைரமுத்துவை எதிர்த்துக்கொண்டேதான் இருப்பேன். வெளிப்படையாக வந்து மன்னிப்பு கேட்டு, இவரால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் அளிக்கச் சொல்லுங்கள். எனக்குக்கூட வேண்டாம். இதற்கான, நான் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. தமிழ் இல்லையென்றாலும் நான் நல்லாவே பிழைப்பேன். எனக்கு நல்ல டேலன்ட் இருக்கு. தமிழ்நாட்டை தாண்டினால் வைரமுத்துவை யாருக்கும் தெரியாது. தமிழ்நாட்டை தாண்டினால் சின்மயியை யாருன்னு தெரியும். மராட்டிய மொழியில் மராத்திய வரலாற்றிலேயே எப்போதும் இடம் பிடிக்கும்படியான சூப்பர் ஹிட் அடித்தது நான் பாடிய பாட்டு. அந்தப் பாட்டுக்கு ஃபிலிம் பேர் விருதுகூட கிடைத்தது. அவர்களுக்குக் கூட என்னை யார்னு தெரியும்.

ஆனால், வைரமுத்துவை தெரியுமா? இவர், பேரை சொல்லி எனக்கு பப்ளிசிட்டி வேண்டும் என்றால், இவர் பெயரை நான் எதற்கு இழுக்க வேண்டும்? இந்தியளவில் தெரிந்த பெரிய பிரபலத்தை சொல்லியிருக்கலாமே? வைரமுத்து போன் செய்து மன்னிப்பு கேட்கிறேன் என்று என்னிடம் சொன்னதற்கு ஆதாரம் இருக்கிறது. நான் மட்டுமல்லாமல் பலர் சொல்லியுள்ளார்கள். மன்னிப்பை வெளிப்படையாக கேட்கவேண்டும். அதுதான், எங்களுக்கு முக்கியம். வைரமுத்து மீது வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டப் பெண்கள் குற்றச்சாட்டு சொல்லியிருக்கும்போது சின்மயியை வைத்து மட்டும் ஏன் டார்கெட் செய்யவேண்டும்?”.

மதன் கார்க்கி ’எனது அப்பா மீது நம்பிக்கை இருக்கிறது’ என்கிறாரே?

”கார்க்கியே ’எங்க அப்பா அப்படித்தான். ஏற்கனவே, நானும் கேள்விவிப்பட்டிருக்கேன்' என்றார். இப்போ, இல்லை என்கிறார்".  

இசையமைப்பாளர் ரஹ்மானை பிச்சையெடுக்க சொன்னார்கள் என்ற சர்ச்சையும் பிஎஸ்பிபி மீது சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

”அவர் பேட்டி வந்து 15 வருடத்திற்குமேல் இருக்கும். இத்தனை வருடம் இதுகுறித்து பேசாமல், இப்போது மட்டும் ஏன் பேசவேண்டும்? அதேசமயம், அப்பள்ளியும் எட்டி உதைத்துவிட்டு எங்கள் பள்ளி மாணவர் என்று மார்தட்டிக்கொள்ளக் கூடாது. என்ன வார்த்தைகளை சொல்லி திமிரில் விரட்டினீர்களோ, அதே குழந்தையை வெட்கமே இல்லாமல் என் பள்ளியில் படித்தவர் என்று எப்படி சொல்ல முடிகிறது. இவர்களால், ரஹ்மான் சார் கடைசியில் பள்ளிக்கே போகவில்லையே?".

தொடர்ச்சியாக உங்கள் மீது வரும் விமர்சனங்களை உளவியல் ரீதியில் எப்படி எதிர்கொள்கிறீர்கள்? 

   “எனக்கு மன உளைச்சல் எல்லாம் இல்லை. பக்குவப்பட்டிருக்கு என்றுதான் சொல்வேன். இன்னும் பல பெண்களுக்காக குரல்கொடுக்க வைத்திருக்கிறது. இடிச்சி இடிச்சி மனம் இப்போ வைரமாகவே ஆகிடுச்சி. என் கணவர், மாமியார், மாமனார் ஆகியோரின் ஊக்கமும்தான் இவ்வளவு துணிச்சலாக என்னை பாதிக்கப்பட்டவர்களுக்கு பேச வைக்கிறது. முள்ளுமேல சேல, சேலமேல் முள்ளு என ஆண்டுகாலமாக பாதிக்கப்பட்ட பெண்களையே இச்சமூகம் விமர்சித்து வருகிறது. இந்த மண்ணாங்கட்டிகள் எல்லாம் எப்போது மாறுவார்கள்".

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com