ஏழை- பணக்காரர் பிளவை முகத்தில் அறைவதுபோல காட்டும் ‘பாராசைட்’.. ஆஸ்கர் விருதையும் அள்ளுமா..?

ஏழை- பணக்காரர் பிளவை முகத்தில் அறைவதுபோல காட்டும் ‘பாராசைட்’.. ஆஸ்கர் விருதையும் அள்ளுமா..?
ஏழை- பணக்காரர் பிளவை முகத்தில் அறைவதுபோல காட்டும் ‘பாராசைட்’.. ஆஸ்கர் விருதையும் அள்ளுமா..?
Published on


கேன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வாங்கி குவித்துள்ள‌ பாராசைட் திரைப்படம் ஆஸ்கர் விருதையும் தட்டிச் செல்லும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நிலவுகிறது.

எது நடந்தாலும் கவலையில்லை என்ற மனநிலையைக் கொண்ட ஏழைக் குடும்பத்துக்கும், எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்யும் பெரும் பணக்காரக் குடும்பத்துக்கும் உள்ள முரண்பாட்டை சித்தரிக்கும் திரைப்படம் ‘பாராசைட்’. தென்கொரிய இயக்குநர் போங்-ஜூன்- ஹோவின் மற்றுமொரு வியக்கத்தக்க படைப்பு இது. பணம் ஒரு மனிதனின் நடத்தையையும் எண்ணத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான காரணியாக இருக்கிறது என்பதை அரசியல் பின்புலத்துடன் கூற முற்படுகிறது பாராசைட்.

கழிவறை, சமையற்கூடம் தனித்தனியாக ஏதுமில்லாத கைவிடப்பட்ட அடித்தளவீட்டில் வசிக்கிறது கிம் குடும்பம். இருபது இருபத்தைந்து வயதுக்குள் ஆணும் பெண்ணுமாக இரு பிள்ளைகள். பணத்துக்குத் திண்டாடிக் கொண்டிருக்கும்போது, பெரும் பணக்காரரான பார்க் குடும்பத்தின் அறிமுகம் கிடைக்கிறது. போலிச் சான்றிதழ் தயாரித்து அந்தக் குடும்பத்தில் வேலைக்குச் சேரும் கிம்மின் மகன், பார்க்கையும் அவரது மனைவியையும் ஏமாற்றி தனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களையும் வேலைக்குச் சேர்க்கிறான். இவர்கள் ஏற்கெனவே அங்கு வேலை செய்தவர்களை தந்திரமாக வெளியேற்றுகிறார்கள். இதன் பிறகு கிம் குடும்பத்துக்கும் பார்க் குடும்பத்துக்கும் இடையேயான நெருக்கத்தையும், முரண்களையும் நகைச்சுவை, விமர்சனம் கலந்த காட்சிகளாகத் தந்திருக்கிறார் போங்ஜூன்-ஹோ.

ஒரு ஏழை ஏன் பணக்காரர் மீது வெறுப்பு கொள்கிறார்..? பணக்காரர்கள் ஏன் வேலைக்காரர் என்றொரு பிரிவு இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்ற அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது இந்தத் திரைப்படம். அதற்காக அந்தக்கேள்விக்கு விடை கூற முயற்சிசெய்யாமல், அறிவுரை ஏதும் கூறாமல், கேள்வியை மட்டுமே விளக்கிவிட்டு காட்சிகள் நகர்ந்து விடுவது இந்தத் திரைப்படத்தின் தனித்தன்மை. ஒட்டுண்ணி என்ற பெயரில் படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டிருப்பதும் நகை முரண்தான்.

உலகுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் உள்ளிட்ட பிரிவுகளில் பாராசைட் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பெருமையைப் பெற்றிருக்கும் முதல் கொரியத் திரைப்படம் இதுதான். திரைப்படத்தில் வடகொரியாவையும் அதன் அதிபரையும் பற்றிய கேலியான வசனங்கள் அரசியல் ஆங்காங்கே அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. படம் நெடுக குறியீடுகள் நிறைந்திருக்கின்றன. தென் கொரியாவின் சமூகக் கட்டமைப்பை உதாரணமாக எடுத்துக் கொண்டு, பூமியெங்கும் உள்ள ஏழை - பணக்காரர் என்ற பெரும் பிளவை முகத்தில் அறைந்து சுட்டிக்காட்டுகிறது பாராசைட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com