சிவா இயக்கத்தில் நேற்று வெளியான கங்குவா திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. அதீத சத்தம், மோசமான திரைக்கதை, எமோசனல் கனெக்ட் இல்லை என கங்குவா படத்தை முதல் நாள் பார்த்தவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
அதே சமயம், இயக்குநர் சிவா செய்தியாளர்களை சந்தித்த போது, “வெளிநாட்டில் படம் பார்த்த தன் நண்பர்கள், படம் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதாக கூறினார்கள்” என பேட்டியளித்திருந்தார்.
தெலுங்கு படமான விக்ரமார்குடுவை ‘சிறுத்தை’ என ரீமேக் செய்துதான் தமிழில் இயக்குநராக அறிமுகமானார் சிவா. அதற்கு முன்னர் தமிழில் ஒளிப்பதிவாளராக மட்டுமே சிவா கவனம் பெற்றிருந்தார். அப்படி அவர் இயக்கிய சிறுத்தை படம், பட்டித்தொட்டியெங்கும் அசுர ஹிட் அடித்தது. அதன் பிறகு அஜித்துடன் வீரம் படத்தில் இணைந்தார்.
அஜித்திற்கு எப்போதுமே அவரை ரிலாக்ஸாக வைத்திருக்கும் இயக்குநர்களை அதிகம் பிடிக்கும். அந்த வகையில் சிவா கில்லாடி. அதனாலே இந்த V கூட்டணி அடுத்தடுத்த படங்களில் இணைந்தது. வீரத்திற்குப் பின்னர் வேதாளம், விவேகம், விஸ்வாசம் என சிவா இயக்கிய எல்லா படங்களுமே அஜித்தை வைத்துத்தான். கங்குவா படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதை உறுதி செய்திருக்கிறார் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
தெலுங்கு பிரெஸ்மீட் ஒன்றில் பேசிய கங்குவா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, “அடுத்ததாக சிவாவிற்கு இன்னொரு படம் கமிட்மென்ட் இருக்கிறது. அந்தப் படத்திற்குப் பின்னர் கங்குவா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையில் கவனம் செலுத்தவிருக்கிறார்” என்றுள்ளார்.
அந்த கமிட்மென்ட் அஜித் திரைப்படம்தான். அஜித்தை வைத்து சிவா இயக்கப்போகும் இந்தத் திரைப்படத்தை 2025ம் ஆண்டு தொடங்கவிருக்கிறார்கள்.
அந்தப் படத்திற்கும் எப்படியும் V எழுத்தில் தான் தலைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு V எழுத்தில் என்ன தலைப்பிருக்கும் என கமென்ட்டில் சொல்லுங்களேன்.!