குறைந்த நாட்களில் அதிக திரைப்படங்களுக்கு தான் இசையமைத்து இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா மனம் திறந்துள்ளார்.
இளையராஜாவின் 75வது பிறந்தநாள் விழா சென்னையில் ஐஐடியில், அங்குள்ள மாணவர்களால் கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட இளையராஜா "ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ" பாடலோடு பேச தொடங்கினார். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது என்றும் அந்த அதிர்வை என் மூளையால் தொட முடிந்ததாகவும் கூறினார்.
நல்ல விஷயங்களை வெளிக் கொண்டு வர இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அனைத்து கல்வி நிலையங்களிலும் இசையை பாடமாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட இளையராஜா, ''இசை கலைஞர்களால் உருவாகும் இசைக்கு தான் ஆற்றல் அதிகம். கணினி உருவாக்கும் இசைக்கு உணர்ச்சி இருக்காது. நான் எப்போதும் உணர்ச்சி மிகுந்த இசையை விரும்புகிறேன். 1978ல் 56 வாரங்களில் 58 படங்களுக்கு நான் இசையமைத்தேன் என்று தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் தான் இசையமைத்த பாடல்களை இளையராஜா பாட, மாணவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. மேலும் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த இளையராஜா, தன்னைப் பற்றி சுயசரிதம் எழுதபோவதாகவும், விரைவில் வெளிவரும் என்று தெரிவித்தார்.