பொது முடக்கத்தால் மும்பையில் சிக்கிய 200 தமிழர்களை நடிகர் சோனு சூட் பேருந்து மூலம் சொந்த ஊர் அனுப்பி வைத்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தில் வேலைக்காக வெளிமாநிலங்களில் தங்கியிருந்த பணியாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டனர். அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. அத்துடன் பல தன்னார்வலர்களும், பிரபலங்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சோனு சூட், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் சேவையில் ஈடுபட்டுள்ளார். அதனடிப்படையில் நேற்று மும்பையிலிருந்து இட்லி வியாபாரம் செய்து வந்த 200 தமிழர்களை தங்கள் ஊருக்குப் பேருந்து மூலம் அனுப்பி வைத்தார். முன்னதாக தமிழர்களிடம் பேசிய அவர், “எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா” எனத் தமிழில் கேட்டார். அவரது உதவிக்கு அனைவரும் ‘நன்றி’ எனத் தெரிவித்தனர். அத்துடன் பெண்கள் பலரும் அவருக்கு ஆரத்தி எடுத்து நன்றியைத் தெரிவித்தனர்.
இதற்கிடையே தங்கள் மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களைத் திருப்பி அனுப்பியதற்காக சோனு சூட்-க்கு உத்தரகாண்ட முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா முடிந்தவுடன் தங்கள் மாநிலத்திற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தர வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.