ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள டவர் கிடைக்காததால் மரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்ட ஹரியானா மாநில மலைக்கிராம மாணவர்களுக்கு, நடிகர் சோனு சூட் செல்போன் டவரையே அமைத்துக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திடீரென்று போடப்பட்ட ஊரடங்கால் போக்குவரத்து செய்ய முடியாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அந்த சமயத்தில், அவர்களை சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு பேருந்துகள், விமானங்களில் அனுப்பி பேருதவியை செய்து புகழ் பெற்றார் நடிகர் சோனு சூட். அதேபோல, ரஷ்யா, கிர்கிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தவித்து வந்த மாணவர்களையும் இந்தியாவுக்கு சொந்த செலவில் விமானங்களில் அழைத்து வந்தார்.
மேலும், சமூக வலைதளங்களில் உதவிக்கேட்டு கோரிக்கை வைப்பவர்களுக்கு தொடர்ச்சியாக உதவி வருகிறவர், தற்போது, செல்போன் டவர் கிடைக்காத மலைக் கிராம மாணவர்களுக்கு டவர் அமைத்துக் கொடுத்துள்ளது பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
”ஹரியானா மாநிலத்திலுள்ள மோர்னி கிராமத்தில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள செல்போன்களுக்கு சரியாக டவர் கிடைப்பதில்லை. மரத்தில் ஏறி உச்சிக்கு சென்றால்தான் டவர் கிடைக்கிறது. இதனால், மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் சிரமப்படுகிறார்கள்” என்று நடிகர் சோனு சூட்டுக்கு ட்விட்டரில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இக்கோரிக்கையை ஏற்ற சோனு சூட் தனது நண்பர் கரண் கில்கோத்ராவுடன் உடனடியாக ஏர்டெல் நிறுவனத்தை அணுகி, அக்கிராமத்தில் செல்போன் டவர் அமைத்துள்ளார். சோனு சூட்டின் இந்த சேவை மூலம் மோர்னி கிராம மாணவர்களுக்கு தங்கு தடையின்றி தற்போது டவர் கிடைக்கிறது. மகிழ்ச்சியுடன் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டு சோனு சூட்டுக்கு நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறார்கள்
இதுகுறித்து சோனு சூட் பேசும்போது, “குழந்தைகள்தான் நம் நாட்டின் எதிர்காலம். இதுபோன்ற சவால்கள் அவர்களின் திறனை அடைய தடையாக இருக்கக்கூடாது. இனி அவர்கள் மரங்களில் ஏறாமல் மகிழ்ச்சியோடு படிக்கட்டும்” என்று கூறியிருக்கிறார்.