புற்று நோய்க்காக அமெரிக்காவில் சிகிச்சைப்பெற்று வரும் நடிகை சோனாலி பிந்தரே, தனக்கு விக் உருவாக்கும் பெண்ணை பற்றி சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
தமிழில், ’காதலர் தினம், ’கண்ணோடு காண்பதெல்லாம்’ படங்களில் ஹீரோயினாக நடித்தவர் இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே. 2002 ஆம் ஆண்டு தயாரிப்பாளரும் இயக்குநருமான கோல்டி பெல்லை திருமணம் செய்துகொண்ட இவர், பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவ்வப்போது இந்தி தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்தார். 43 வயதாகும் சோனாலி, தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாக சினிமா துறையினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் கீமோ சிகிச்சைக்காக மொட்டை அடித்தார். அப்போது அவர் கண்ணீர்விட்டபடி உருக்கமாக பேசியிருந்தார். பிறகு சிகிச்சைக்குப் பின் விக் வைத்துக்கொண்டு புதிய தோற்றத்தில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு கீழே, ‘தோற்றம்தான் என் அழகிய சாபம். அழகாக இருக்க, யாருக்குத்தான் ஆசை இருக்காது? நமது தோற்றம் அழகாக இருப்பது முக்கியம். அது ஆழ்ந்த உளவியல் தாக்கத்தை நம் மீது ஏற்படுத்தும்.
தன் தோற்றம் பற்றிய கர்வம் இருப்பது மற்றவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது. உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் விஷயங்களை செய்து கொண்டிருப்பது முக்கியம். எப்படி இருந்தால் மகிழ்வாக இருப்பீர்கள் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். அதனால் அதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் புதிய விக் மற்றும் தோற்றத்தோடு இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை இப்போது வெளியிட்டுள்ள சோனாலி, தனது புதிய லுக் மற்றும் ’விக்’கிற்கு இவர்தான் காரணம் என்று அமெரிக்க பெண் ஒருவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ‘சில நேரம், விரும்பத்தகாத சூழ்நிலைகளில் நீங்கள் மிகவும் அற்புதமான மனிதர்களை சந்திப்பீர்கள். முன்பின் தெரியாத சிலர், விரைவிலேயே தோழியாகிவிடும் சம்பவமும் நடக்கும். அப்படிப்பட்ட ஒருவர்தான் இந்த பாஹி. ஹேர்ஸ்டைல் மற்றும் விக் உருவாக்கும் மேதை. சிறப்பான தோழி. பலவிதமான ’விக்’குகளை உருவாக்கி எனது லுக்கை மாற்ற விரும்பியவர்.
ஆதரவாகவும் புரிந்துகொண்டும் மன நிறைவாகவும் உடனிருந்தவர். நன்றி போஹி. எவ்வளவு நாள் ஒன்றாக இருப்போம் என தெரியாது. நீங்கள் உண்மையிலேயே ஒரு தேவதை!’ என்று கூறியுள்ளார்.