பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து, இணையதளங்களிலும் ட்ரெண்ட் அடித்த ’சொடக்கு’ பாடல் குறித்து பாடகர் அந்தோணிதாசன் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சூர்யா நடிப்பில் நேற்று வெளியான ’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் சொடக்கு பாடல், படம் வெளிவருவதற்கு முன்பே இணையத்தளத்தில் பல சாதனைகளை செய்தது. அனிருத் பிறந்த நாளான்று வெளியிடப்பட்ட இந்தப் பாடலின் வரிகள் மற்றும் இசை ஈர்ப்பாக அமைந்தால் இளைஞர்கள் மனதில் எளிதில் சென்று பதிந்தது. அதன் பின்பு, எந்தப் பக்கம் திரும்பினாலும் சொடக்குப் பாடல் ஒலிக்கத் துவங்கியது. இந்தப் பாடலை பாடிய அந்தோணிதாசன் நாட்டுப்புறப் பாடல்களை பாடுவதில் வல்லவர். தனித்துவமான குரல் அம்சம் கொண்ட அந்தோணி, 2017 ஆம் ஆண்டு ‘திண்டுக்கல் சாரதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதன் பின்பு, வெளிவந்த ’சூது கவ்வும்’ திரைப்படத்தில் வெளியான ’காசு, பணம்,துட்டு’ பாடல் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.
அதன் பின்பு, அந்தோணி காட்டில் வெற்றி மழைதான். அடுத்தடுத்த அந்தோணி பாடிய அனைத்து பாடல்களும் ஹிட்டாகியது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும்’தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில், அந்தோணி பாடியுள்ள சொடக்கு பாடல் அவருக்கு, மேலும் புகழை வாங்கி தந்துள்ளது. மண் மணம் மாறாமல் ஒலிக்கும் அவரின் குரல் அனைவரின் ஃபேவரைட் வாய்ஸாக மாறியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து பகிர்ந்துள்ள அந்தோணிதாசன் “சொடக்குப் பாடல் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய வரம். அனிருத் இசையில் நான் இரண்டாவது முறையாக பாடியுள்ளேன். முதலில் எனக்கு சூர்யா படத்திற்கான பாடுகிறோம் என்பது தெரியாது. ரெக்கார்டிங் முடித்த பின்பே, இந்தப் படத்தின் ஹீரோ சூர்யா என்று தெரிய வந்தது. அதன் பின்பும் அவரை சந்திகக் முடியாமல் இருந்தது. பின்பு, பாடல் யுடியூப், ட்விட்டர், சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பின்பு, நிகழ்ச்சி ஒன்றில் சூர்யாவை சந்திக்க நேரிட்டது. அப்போது சூர்யா, சொடக்குப் பாடலை சூப்பராக பாடியுள்ளீர்கள் என்று பாராட்டினார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 30 வருட இசை அனுபவத்தில் சொடக்குப் பாடல் எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளது” என்று தெரிவித்தார்.