நடிகர் தனுஷுடன் இணைந்து சிநேகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘எதிர்நீச்சல்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் துரை செந்தில் குமார். அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து ‘கொடி’யை இயக்கினார். இந்தப் படதில் இடம்பெற்ற நடிகை த்ரிஷாவின் எதிர்மறையான கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. கதை அம்சத்திலும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் தனுஷுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்திருந்தது.
இந்நிலையில் தனுஷை வைத்து இயக்குநர் துரை செந்தில் குமார் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இதில் நடிகை சிநேகா இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. தலைப்பிடப்படாத இப்படத்தில் தனுஷ், தந்தை மற்றும் மகன் வேடத்தில் நடிக்கின்றார். இதற்கான படப்பிடிப்பு வேலைகள் இந்த மாதம் தொடங்க உள்ளன. தனுஷின் தந்தை கதாபாத்திரத்திற்கு ஜோடியாகதான் சிநேகா நடிக்க உள்ளார். தனுஷின் இளம் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இப்போது தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அசுரன்’ படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார். அதனையடுத்து விரைவில் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷின் அண்ணனும் இயக்குநருமான செல்வராகவன் இயக்கியிருந்த ‘புதுப்பேட்டை’யில் தனுஷூடன் இணைந்து சிநேகா நடித்திருந்தார். இது 2006 ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாக வெற்றியும் பெற்றது. படத்தில் இடம்பெற்ற தனுஷின் ‘கொக்கி குமார்’ கதாபாத்திரம் தமிழ் சினிமாவில் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியிருந்தது. இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட உள்ளதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தனுஷ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின் போது தெரிவித்திருந்தார். ஆக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனுஷுடன் இணைந்து சிநேகா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.