அமிதாப் பச்சன், எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் ‘உயர்ந்த மனிதன்’-மீண்டும் படப்பிடிப்பு துவக்கம்

அமிதாப் பச்சன், எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் ‘உயர்ந்த மனிதன்’-மீண்டும் படப்பிடிப்பு துவக்கம்
அமிதாப் பச்சன், எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் ‘உயர்ந்த மனிதன்’-மீண்டும் படப்பிடிப்பு துவக்கம்
Published on

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா ஆகிய இருவரின் நடிப்பில் உருவாகி வந்த ‘உயர்ந்த மனிதன்’ திரைப்படம், தயாரிப்பு பிரச்னை காரணமாக பாதியில் நின்றுபோன நிலையில், தற்போது அந்தப் படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கவுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டில், எஸ்.ஜே. சூர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில், தமிழ்வாணன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘கள்வனின் காதலி’. இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து, இயக்குநர் தமிழ்வாணன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா கூட்டணி, மீண்டும் ‘உயர்ந்த மனிதன்’ என்றப் படத்தில் இணைந்தது. இந்தப் படம் கடந்த 2019-ம் ஆண்டு துவங்கப்பட்ட நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், எஸ்.ஜே. சூர்யாவின் தந்தையாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்புகளும் துவங்கின. முதன் முதலாக அமிதாப் பச்சனின் நேரடி தமிழ் படம் என்பதாலும், தமிழ், இந்தி என இருமொழிகளில் உருவாகி வருவதாகவும் தெரிவித்ததால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் அமிதாப் பச்சன் நடித்த, சில காட்சிகளின் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. ஏனெனில் அமிதாப் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவுடன், பின்னணியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகைப்படமும் இருந்தது. இதுகுறித்து அமிதாப் பச்சனும் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், தயாரிப்பு நிறுவனத்துக்கும், அமிதாப் பச்சனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, படம் ஒரே ஷெட்யூலுடன் நின்றுபோனதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா, அமிதாப்பச்சனை சமாதானப்படுத்தி, மீண்டும் நடிக்க வைப்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது இந்தப் பிரச்சனை சுமூகநிலையை எட்டியுள்ளதால், மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் என்று எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார். அதன்படி, ஏற்கனவே இருந்த தயாரிப்பு நிறுவனம் விலகிக் கொள்ள, புதிய தயாரிப்பு நிறுவனம் ‘உயர்ந்த மனிதன்’ படத்தை மீண்டும் தயாரிக்க உள்ளது. இதற்கான ஒப்பந்த நகலை எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டு மீண்டும் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது என்று கூறியுள்ளார்.

புதிய தயாரிப்பு நிறுவனம் படத்தை கைப்பற்றியுள்ளதால், அமிதாப் பச்சன் சமாதானம் அடைந்து படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அமிதாப் பச்சனின் கால்ஷீட்டில், 10 நாட்கள் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளதாகவும், மீதம் 15 நாட்கள் மட்டுமே அவர் நடிக்க வேண்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழில் ‘உயர்ந்த மனிதன்’ என்றும், இந்தியில் ‘தி கிரேட் மேன்’ (The Great Man - Tera Yaar Hoon Mein) என்ற பெயரிலும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com