விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் ’தளபதி 65’ படத்தினை இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா இயக்க இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பொதுவாகவே ஹீரோக்கள் ஒருபடம் தோல்வி அடைந்தால் மீண்டும் அதே இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கத் தயங்குவார்கள். ஆனால், விஜய் அப்படியல்ல. கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ’அழகிய தமிழ் மகன்’ தோல்வியடைந்தாலும் மீண்டும் பத்து வருடங்கள் கழித்து 2016 ஆம் ஆண்டு அப்படத்தின் இயக்குநர் பரதனுக்கே தனது 60 வது படமான பைரவாவை இயக்க வாய்ப்பளித்தார். சூப்பர் ஹிட் படமான குஷி 2000 ஆம் ஆண்டு வெளியானது. மீண்டும் 20 வருடங்கள் கழித்து எஸ்.ஜே சூர்யாவுடன் இணையவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. தர்பார் தோல்வியால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 படத்திற்கு முருகதாஸின் சம்பளத்தைக் குறைக்கச்சொல்லியதால், அப்படத்திலிருந்து விலகியுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். இதனால், தளபதி 65 படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கிலிருந்து விஜய் தற்போது வீட்டில்தான் இருக்கிறார். ஏனென்றால், மாஸ்டர் படத்தின் அனைத்துப் பணிகளும் முன்னரே நிறைவடைந்துவிட்டன. தளபதி 65 படத்தினை மகிழ் திருமேனி, கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்கள் என்ற தகவல்கள் வெளியான நிலையில், அவர்களும் உதயநிதி, விக்ரம் ஆகியோருடன் வெவ்வேறு படங்களை இயக்க ஒப்பந்தம் போட்டுவிட்டார்கள். அதேபோல, சுதா கொங்கரா, நெல்சன் திலிப் குமார் பெயர்களும் அடிப்பட்டன. இந்நிலையில், விஜய் 65 படத்தினை எஸ்.ஜே சூர்யா இயக்க விருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டு வாலி படத்தின் மூலம் அஜித்துக்கு சூப்பர் ஹிட் கொடுத்து அறிமுக இயக்குநரானார் எஸ்.ஜே சூர்யா. அதற்கு, அடுத்த ஆண்டு விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கினார். அந்த ஆண்டில் வசூல் சாதனை செய்தது குஷி. அதோடு, வாலி படத்தில் ஜோதிகாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்திய பெருமையும் எஸ்.ஜே சூர்யாவையேச் சேரும். கடந்த 2006 ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா தமிழ்வாணன் இயக்கத்தில் ‘கள்வனின் காதலி’ படத்தில் நடித்தார். மீண்டும் அவரின் இயக்கத்திலேயே தற்போது ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார், என்பது குறிப்பிடத்தக்கது.