2018ஆம் ஆண்டு வெளியான இன்று நேற்று நாளை படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ரவிக்குமார். இவர் சிவகார்த்திகேயன் உடன் அயலான் படத்தின் மூலம் இணைந்துள்ளார். படத்தின் அறிவிப்பு வெளியாகி பல வருடங்கள் ஆன நிலையில் கொரோனா, தொழில்நுட்ப பணிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒருவழியாக தற்போது பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் அயலான் படத்தை 24 ஏ. எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. யோகிபாபு, கருணாகரன், பானுபிரியா, இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
'அயலான்' படத்தின் டீசர் அக்டோபர் 6-ஆம் தேதி வெளியாகும் என்று புதிய போஸ்டருடன் சமீபத்தில் அறிவித்திருந்தது படக்குழு. அந்த வகையில் இன்று இரவு 7.08 மணியளவில் டீசர் வெளியாகியுள்ளது. லியோ படத்தைப் போலவே டீசர் நேரத்தை வெளியிடாமல் காத்திருக்க வைத்து கடைசி நேரத்தில் தெரிவித்தார்கள்.
எதிர்ப்பார்ப்பை தக்க வைக்கும் வகையில் டீசர் அமைந்துள்ளது. ’ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு எனர்ஜி இந்த உலகத்தை டாமினேட் செய்கிறது’ என்ற வசனத்துடன் தொடங்கும் டீசர் எனர்ஜி விவகாரத்தை முடித்து பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்னையை தொடுகிறது.
இதில் வெட்டுக்கிளி தாக்குதல் காண்பிக்கப்படுகிறது. சைன்ஸ் தொடர்பான காட்சிகளின் கிராபிக்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் டீசரில் பெரிய அளவில் ஹைப் கொடுக்கும் சுவாரஸ்யம் ஏதுமில்லை.
இந்த டீசர் காப்பான் படத்தை சில இடங்களில் நினைவூட்டுகிறது. காப்பான் படத்தில் வெட்டுக்கிளி பிரச்னை வரும். காப்பானில் சூர்யா கிராமத்தில் விவசாயியாகவும், பின்னர் பிரதமர் அலுவலகத்தில் உயர் அதிகாரியாகவும் வருவார். அதேபோல், துண்டு போட்ட சிவகார்த்திகேயன் காப்பானின் கிராமத்து சூர்யாவை நினைவூட்டுகிறார்.
குடும்ப ரசிகர்களை மனதில் வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதை டீசர் காட்டுகிறது. ஏனெனில் தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம் உண்டு. அதனால், சிவகாத்திகேயனுக்கே உரித்தான காமெடி காட்சிகளும் நிச்சயம் இடம்பெறும் என்றே தெரிகிறது. அதற்கு வலுசேர்க்க யோகிபாபு, கருணாகரன் கதாபாத்திரங்கள் இருக்கின்றன.