வேலைக்காரன் படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை ஐயங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இயக்குநர் மோகன் ராஜாவுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் வேலைக்காரன். ரெமோவின் மாபெரும் வெற்றியால் தமிழகம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சிவகார்த்திகேயன் படங்களுக்கான மார்க்கெட் பெரிதாக உயர்ந்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் படங்களை வாங்க பெரிய நிறுவனங்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னதாக வேலைகாரன் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியது என்று தயாரிப்பு நிறுவனமான ‘24ஏஎம் ஸ்டூடியோஸ்’ நேற்று அறிவித்திருந்த நிலையில் தற்போது படத்தின் யூரோப் மற்றும் யூகே வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஐயங்கரன் இண்டர்நேஷனல் கைப்பற்றியுள்ளது. இந்த செய்தியை ‘24ஏஎம் ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதேபோல் நியுசிலாந்த், ஆஸ்திரேலிய வெளியீட்டு உரிமையை சதர்ன் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
வேலைக்காரன் படத்தின் வெளிநாடு வெளியீட்டு உரிமைகளின் விற்பனை மகிழ்ச்சியளிப்பதாக ‘24ஏஎம் ஸ்டூடியோஸ்’ தெரிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனின் படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் வசூல் வேட்டை செய்ய தவறுவதில்லை. இதனால் விநிநோகிஸ்தர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் படங்களுக்கு உள்ள வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.