கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வசூலில் நாளுக்குநாள் சரிவை சந்தித்து வருகிறது.
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, ‘டான்’ ஆகியப் படங்கள் வியாபார ரீதியாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படத்திற்கும் அதிகளவிலான எதிர்பார்ப்பு நிகழ்ந்தது. மேலும், தெலுங்கு திரையுலக இயக்குநர் கே. அனுதீப் இயக்கத்தில், தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இந்தப் படம் உருவானநிலையில், தீபாவளியை முன்னிட்டு கடந்த 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இந்தப் படம் கடந்த 5 நாட்களில் 38 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.
தமிழ்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படம், சிவகார்த்திகேயனுக்கு தீபாவளி பண்டிகை தினத்தில் முதன்முதலாக வெளியான திரைப்படமாகும். எனினும், முதல்நாளில் போதிய வரவேற்பு கிடைக்காததும், கலவையான விமர்சனங்களை பெற்றதாலும் விடுமுறை தினத்திலும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் ரசிகர்களை ஈர்க்காமல், வசூலில் பின்தங்கி காணப்படுகிறது.
அதேநேரத்தில் தொடர்ந்து ஹிட் கொடுத்து மூன்றாவது வெற்றியை ருசித்துள்ளார் கார்த்தி. ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன்’ என அடுத்தடுத்து வெற்றிகளை கொடுத்த கார்த்தி, ‘சர்தார்’ திரைப்படம் மூலம் மற்றுமொரு வெற்றிப் படத்தை கொடுத்துள்ளார். ஸ்பை த்ரில்லர் கதையாக உருவான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், கடந்த 5 நாட்களில் இந்தப் படம் 60 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. தீபாவளி விடுமுறை தினத்தில் வசூலை வாரி குவித்த இந்தத் திரைப்படம், விடுமுறை நாட்கள் முடிந்தும் திரையரங்குகளில் குறிப்பிடத்தக்க அளவு வரவேற்பு பெற்று வருகிறது. இதனால் இன்னும் சில தினங்களில் இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.