இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இருவரின் அசாத்தலான நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘அமரன்’.
2014-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 44-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பட்டாலியனில் பணிபுரியும் போது, ஷோபியானில் நடந்த காசிபத்ரி ஆபரேஷனில் முக்கியப் பங்கு வகித்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டு வெளியானது.
இந்திய ராணுவ வீரர்களின் தீரம்மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் அமரன் திரைப்படம், முடிந்தளவு உண்மை காட்சிகளை படமாக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டது.
ஆனால் காஷ்மீரில் நிலவும் அரசியல் என்ன என்பது குறித்தும், அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை சூழல் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் அமரன் பேசவில்லை என பல்வேறு விமர்சனங்களும், அங்கிருக்கும் ஒரு சமூக மக்களை தவறாக சித்தரிப்பதாகவும் கூறி படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் அரங்கேறின.
கடுமையான விமர்சனங்கள், எதிர்ப்புகள் என நாளுக்கு நாள் பேசப்படும் ஒரு விஷயமாக அமரன் திரைப்படம் மாறினாலும், 3வது வாரத்தில் காலடி வைத்திருக்கும் அமரன் திரைப்படம் வசூலில் பல சாதனைகளை முறியடித்துவருகிறது.
அக்டோபர் 31ம் தேதி வெளியான அமரன் திரைப்படம் 17வது நாளை கடந்து திரையரங்கில் அனைவரும் விரும்பி பார்க்கும் திரைப்படமாக இருந்துவருகிறது. பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை முறை, ரானுவத்திற்காக அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் உடனான காதல் வாழ்க்கை அதில் அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் என பல முகங்களை வெளிப்படுத்தியிருக்கும் அமரன் படமானது அனைவரையும் திரையரங்கிற்கு இழுத்து வருகிறது.
உண்மை கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரின் நடிப்பும் அதிகப்படியான பாராட்டை பெற்றுவரும் நிலையில், படத்தின் வசூலும் உலகளவில் ரூ.285 கோடியை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமரன் படத்தின் வசூலை பொறுத்தவரையில் sacnilk.com படி, 17வது நாள் முடிவில் இந்தியாவில் மட்டும் ரூ.209.35 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு கலக்சன் ரூ.75.15 கோடியாக இருக்கும் பட்சத்தில் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் கலக்சனாக அமரன் ரூ.284.5 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
2010-ல் வெளியான ரஜினியின் எந்திரன் திரைப்படம் தமிழ் சினிமா இண்டஸ்டிரியின் பிளாக் பஸ்டர் திரைப்படமாக சக்கை போடு போட்டது. வசூலில் உலகளவில் ரூ.290 கோடியை ஈட்டி புதிய டிரெண்ட் மார்க்கை செட் செய்தது. இந்நிலையில் ரஜினியின் எந்திரன் திரைப்படத்தின் உலகளாவிய வசூலை இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் முறியடித்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படத்தின் மோசமான விமர்சனங்கள் அமரன் திரைப்படத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஒருவேளை அமரன் திரைப்படம் ரூ.300 கோடி கிளப்பில் இணையும் பட்சத்தில், இளம்வயதில் ரூ.300 கோடி வசூலை ஈட்டிய முதல் தமிழ்நடிகர் என்ற சாதனையை சிவகார்த்திகேயன் படைப்பார்.