இந்தியா தேவையில்லாத பிரச்னைகளால் நிறைந்துள்ளது என்று பாடகர் ஸ்ரீநிவாஸ் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார்.
பல மொழிகளில் பாடக்கூடிய பாடகர் ஸ்ரீநிவாஸ். இப்போது அவரது அடையாளம் ‘சூப்பர் சிங்கர்’ ஷோதான். அந்த நிகழ்ச்சியில் பல காலமாக அசைக்க முடியாத நடுவராக இருந்து வருகிறார். வேதியியல் துறையில் பணியாற்றிய இவர், ரசனையான பல நூறு பாடல்களைப் பாடியவர். இவர் போட்ட ட்வீட் ஒன்று இப்போது பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதனையொட்டி பலரும் கருத்திட்டு வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வருகையையொட்டி நேற்று அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய ட்ரம்ப், பிரதமர் மோடியை வெகுவாக புகழ்ந்து பேசினார். அதற்கான வீடியோ பதிவு ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்த ஒருவர், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முழு மனதுடன் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து பாடகர் ஸ்ரீநிவாஸ் ஒரு கருத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “இந்தியா தேவையில்லாத பிரச்னைகளால் நிறைந்துள்ளது. மேலும் இதில் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுப்பது போல அரசே இங்கு பல பிரச்னைகளை உருவாக்கிறது. தொழில்நுட்பத்தின் மீதும் அமைதியின் மீதும் உலகம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில் நாம் இந்து, முஸ்லிம், பாகிஸ்தான் ஆகியவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டார்.