தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் குறித்து பாடகி சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சியின் போது போட்டி பங்கேற்பாளர்களிடன் பேசிய கமல்ஹாசன் பேருந்தில் பெண்களை உரசுவது போலான பாலியல் தொந்தரவுகள் குறித்து பேசினார். அப்போது போட்டி பங்கேற்பாளர்களில் ஒருவரான நடிகர் சரவணன், தன் கையை உயர்த்தி தானும் கல்லூரி நாட்களில் அவ்வாறு செய்திருப்பதாக தெரிவித்தார். உடனடியாக அங்கு கூடியிருந்த பார்வையாளர்களும் சிரித்து மகிழ்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்தக்காட்சியை ட்விட்டரில் குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள பாடகி சின்மயி, ''பேருந்து பயணத்தில் பெண்களை பாலியல் ரீதியாக தீண்டியதாக ஒருவர் தெரிவிக்கிறார். அதனை தமிழ்த் தொலைக்காட்சி பெருமையாக ஒளிபரப்புகிறது. அதனை அங்கு கூடியிருந்த பார்வையாளர்களும் கைதட்டி கொண்டாடுகின்றனர். இப்படி பாலியல் சீண்டல்களில் ஈடுபடுபவது பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாக உள்ளது.
மில்லியன் கணக்கான குழந்தைகள் பேருந்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகின்றன. இது பலருக்கும் புரிவதில்லை. கைதட்டி கொண்டாட இது என்ன பொழுதுபோக்கா? ஆண்களும் கூட பாலியல் சீண்டலுக்கு ஆளாகின்றனர். பள்ளிக்கும், வேலைக்கும் செல்ல வேண்டுமென்பதால் பெண்கள் பாலியல் சீண்டல்களை பெரிதுபடுத்தாமல் இருக்கின்றனர். பாலியல் சீண்டலை அனுபவத்தபவர்களுக்கு தான் இது புரியும்'' என தெரிவித்துள்ளார்.