“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் "மாநாடு"

“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் "மாநாடு"
“சிம்புக்காக உறுதி கொடுத்த உஷா ராஜேந்தர்”- மீண்டும் தொடங்கும் "மாநாடு"
Published on

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள ‘மாநாடு’ படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிம்புவும் உடல் எடையைக் குறைக்க தீவிர முயற்‌சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது. கடந்த மாதம் மலேசியாவில் தொடங்க இருந்த படப்பிடிப்பு, சில காரணங்களால் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில்‌ ‘மாநாடு’ படத்தில் இருந்து சிம்பு நீக்கப்படுவதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக வேறு நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டு படம் உருவாக்கப்படுமென தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சிம்பு ‘மாநாடு’ படப்பிடிப்பிற்கு வருவார் என்று அவரது தாயார் உஷா ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 'மாநாடு' படத்தின் விவகாரம் குறித்து, கடந்த 15-ம் தேதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விசாரணை நடந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், சிவசக்தி பாண்டியன், கே.ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும், சிம்புவின் தாயார் உஷாவும் கலந்துகொண்டனர். அப்போது தயாரிப்பாளர் தரப்பும், சிம்பு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன் வைத்தாகக் கூறப்படுகிறது. 

பின்பு சிம்புவின் தாயார் உஷா, ‘மாநாடு’ படப்பிடிப்பிற்கு சிம்பு சரியாக வருவார் என்றும் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மட்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் தெரிவித்துள்ளார். இதனையத்து, தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இந்தப் பிரச்னையை பேசி முடிக்கும் சத்யஜோதி தியாகராஜன், இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் பேசியுள்ளார். அவரும் "ஓகே" சொன்னதால் சிம்புவிடம் புதிய ஒப்பந்தம் போடப்பட்டு, மாநாடு படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுபற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கேட்டபோது, “ சிம்பு தரப்புக்கு சில கோரிக்கைகளை வைத்துள்ளோம். அதற்கு ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே படப்பிடிப்பு தொடங்கும். இது தொடர்பாக தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசிவருகிறார்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com