தன்னை எப்போதும் அப்டேட்டாக வைத்துக்கொள்ளும் சிம்பு உடல் எடைக்குறைப்பதில் மட்டும் அவுட் டேட் ஆகிவிட்டார். கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திலிருந்தே உடல் பருமனாகக் காணப்பட்டார். கடந்த ஆண்டு வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் அவரது தோற்றத்தை வைத்தே பெரிதும் விமர்சிக்கவும் பட்டார். ஆனால், தற்போது 101 கிலோ எடையிலிருந்து 71 ஆக செம்ம ஸ்லிம்மாகக் குறைந்து புதிய போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார்.
சமூக வலைதளங்களிலிருந்து ஒதுங்கியிருந்த சிம்பு கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி, முதல் முறையாக வெளியிட்ட புகைப்படங்கள், அவரை விமர்சித்தவர்களில் காதுகளிலிருந்து புகைவர வைத்தது. அந்தளவிற்கு ஸ்லிம் சிம்புவானார்.
இந்நிலையில், மீண்டும் சிம்பு தனது அடுத்த போட்டோஷூட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், நீச்சல் குளத்தில் கறுப்பு உடையில் இருக்கும் சிம்பு, பாம்பு பிடிப்பதுபோல் கைகளைத் தூக்கியவாறு இருக்கிறார். சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்பு பாம்பை கழுத்தில் வைத்துக்கொண்டிருப்பார்.
அதோடு, சமீபத்தில் சிம்பு நிஜ பாம்பைப் பிடிக்கும் வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, பாடல்கள், டப்பிங் என அனைத்து பணிகளும் நிறைவடைந்ததையொட்டி, கடந்த நவம்பர் 9 ஆம் தேதியிலிருந்து சிம்பு மாநாடு ஷூட்டிங்கில் இருக்கிறார்.
அவர், வெளியிட்டுள்ள புகைப்படம் மாநாடு லேட்டஸ்ட் புகைப்படம் என்று சிம்பு ரசிகர்களும் நெட்டிசன்களும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், இந்தப் புகைப்படத்திலும் நீச்சல் குளத்தில் சிம்பு பாம்பு பிடிப்பதுபோல் கையைத்தூக்கிக்கொண்டு இருப்பது ‘இது ஈஸ்வரன் ஷுட்டிங் இல்லை சிம்பு; மாநாடு ஷூட்டிங்’ என்று சொல்ல வைக்கிறது. ஆனாலும், இந்தப் புகைப்படம் சிம்பு நடித்து கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான தொட்டி ஜெயா படத்தின் கெட்டப்பையும் நினைவூட்டுகிறது.