சிம்பு - கெளதம் மேனன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு சிம்பு கெளதம்மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று திருச்செந்தூரில் தொடங்கிய நிலையில், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் படம் குறித்து பேசும்போது, "வெந்து தணிந்தது காடு' படம் இதுவரை சிம்பு செய்திராதது. அவரது நடிப்பின் மொத்த பரிணாமத்தையும் வெளிப்படுத்தும் படைப்பாக இருக்கும். இயக்குநர் கௌதம் மேனன் இந்த படத்தின் கதையை பற்றி என்னிடம் கூறும்போது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. அவரது வழக்கமான கதைகளில் இருந்து வேறு விதமான திரைக்கதையை கொண்டிருந்தது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
100 சதவீதம் தலைப்புக்கு நியாயம் செய்யும் படைப்பாக இப்படம் இருக்கும். ஜெயமோகன் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். ஒரு சிறந்த ஆக்சன் படமாக, கிராமம் மற்றும் நகர பின்னணியில் கதை நடைபெறும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று ஆகஸ்ட் 6 அன்று படப்பிடிப்பு, திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியில் இருக்கிறோம்.
கௌதம் மேனனின் இனிய தமிழ் தலைப்புகளுக்கு நான் ரசிகன். அந்த வகையில் “வெந்து தணிந்தது காடு” புகழ்பெற்ற பாரதியார் பாடலின் வரியாகும். அவரின் நூற்றாண்டை கொண்டாடும் இந்த தருணத்தில் எங்கள் படைப்புக்கு அவரது தலைப்பு வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி" என்று கூறியுள்ளார்.