சுந்தர்.சி இயக்கத்தில் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது சங்கமித்ரா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் போஸ்டர் வெளியீட்டுக்காக பிரான்ஸில் நடைபெற்ற கான் திரைப்பட விழாவுக்கு சென்று சங்கமித்ரா படக்குழுவினர் பங்கேற்றனர்.
நாயகியை பிரதானப்படுத்தியே படம் உருவாக இருப்பதால் ஷ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்படத்திற்காக பல மாதங்கள் வாள், குதிரையேற்றம், சிலம்பம் என பல பயிற்சிகளை அவர் பெற்று வந்தார். இந்நிலையில் என்ன நிகழ்ந்ததோ தெரியவில்லை. சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் நீக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ்.
’தவிர்க்கமுடியாத காரணங்களால், சங்கமித்ரா படத்தில் ஸ்ருதி ஹாசனுடன் பணியாற்ற முடியவில்லை என்று அறிவித்துள்ளது.
படத்திலிருந்து விலகியது குறித்து ஸ்ருதி ஹாசன் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சங்கமித்ரா படத்தில் பணியாற்ற வேண்டாம் என்கிற முடிவை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகப் பெரிய படம். 2 வருடங்கள் தேதிகள் ஒதுக்க வேண்டும் என எல்லாம் தெரிந்தே ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
படத்தின் மீதிருந்த ஆர்வம், அர்பணிப்பு தாண்டி இந்த முடிவை எடுக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. முழுமையான திரைக்கதை வடிவம் அவருக்குத் தரப்படவில்லை. படப்பிடிப்புத் தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே விலகலுக்குக் காரணம். இப்போது அவர் நடித்துள்ள பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் உள்ளார். அடுத்ததாக சபாஷ் நாயுடு படத்துக்காகத் தயாராகி வருகிறார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
படத்திலிருந்து அவர் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டதன் காரணத்தை இருதரப்பினரும் வெளிப்படையாக கூறவில்லை.