15 ஆண்டுகளுக்கு முன்... ஒரு தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோவில் பாடல் பாட பங்கேற்றார் அந்த 16 வயது சிறுமி. அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த இயக்குநர் சஞ்சய் லீலா பான்சாலி, அந்த சிறுமியின் குரலில் லயித்துப் போனார். இனிமையான குரல்வளம், திறமையான ராகம் என அந்தச் சிறுமியின் பாடல் திறமையைப் பார்த்து வியந்து போனார் பான்சாலி. பாராட்டியதோடு மட்டுமல்லாமல் தனது அடுத்த படமான தேவதாஸ் படத்தில் அந்தச் சிறுமிக்கு பாடும் வாய்ப்பையும் கொடுத்தார். அந்தப் படத்தில் ஒரு பாட்டு, இரண்டு பாட்டல்ல. அறிமுகப் படத்திலேயே ஐந்து பாடல்களைப் பாடிய ஒரே சிறுமி அவராகத்தான் இருப்பார். இப்போது புகழ் பெற்ற பாடகராக வலம் வரும் ஷ்ரேயா கோஷல்தான் அந்தப்பாடகி.
திரைத்துறைக்கு வந்து இன்றோடு 15 வது ஆண்டை நிறைவு செய்கிறார் ஷ்ரேயா கோஷல். இந்தியாவின் மிகச்சிறந்த பாடகர்களில் ஒருவராக வலம் வரும் அவர், பல மொழி படங்களில் பாடி வருகிறார். இதுவரை சிறந்த பாடகருக்கான விருதை 4 முறை பெற்றுள்ளார். 15 ஆண்டை நிறைவு செய்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், திரைத்துறையில் 15 ஆண்டுகளை கடந்துவிட்டேன். இந்தத் தருணத்தில் எனக்கு சிறந்த பாடல்களை பாட வாய்ப்பு வழங்கிய அத்தனை பேரையும் நினைத்துப்பார்க்கிறேன். இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி’ எனக் கூறி இருக்கிறார்.