மெர்சல் திரைப்படக் காட்சிகளை யாருக்காகவும் நீக்கக் கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளை நீக்குமாறு பாஜக தலைவர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வந்தனர். மெர்சல் திரைப்பட சர்ச்சை தொடர்பாக தேசிய அளவில் விவாதங்கள் நடைபெற்றுன.மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக பலரும் குரல் எழுப்பினர்.
மெர்சல் திரைப்படத்தில் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை அகற்றப்பட வேண்டுமென்றால் அதற்கு தயாராகவே உள்ளதாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மெர்சல் திரைப்பட காட்சிகளை யாருக்காகவும் நீக்கக் கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ தற்போது மெர்சல் திரைப்படத்தில் வரும் கருத்துக்கள் வசனங்கள் அனைத்தும் சில அரசியல் அமைப்புகள், பத்திரிகை ஊடகங்கள், இணைய தளங்கள்,சமூக வலைதளங்கள் மூலமாகவும் விமர்சித்து வருபவைதான். ஒரே நாட்டில் அவர்களுக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் சினிமா ஊடகத்திற்கும் கலைஞர்களுக்கும் கிடையாதா?
மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் தணிக்கைக்குழு அதற்கான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அனுமதியளித்த பின் வெளியிடப்பட்டும் திரைப்படங்களை தனி நபர்களின் விமர்சனங்களுக்காக மாற்றுவது கருத்து சுதந்திரத்தை கேள்விக் குறியாக்குகிறது. தணிக்கை செய்யப்பட்டு வெளிவந்த மெர்சல் திரைப்படத்தில் உள்ளவற்றை யாருக்காகவும் நீக்கக் கூடாது. இது போன்ற செயல்கள் பிற்காலத்தில் பல பெரிய பிரச்சனைகள் உருவாக காரணமாகும்’ என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியுள்ளது.