திரையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் படம்: குரல் கொடுத்த அண்ணன் சிவராஜ்குமார்

திரையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் படம்: குரல் கொடுத்த அண்ணன் சிவராஜ்குமார்
திரையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் படம்: குரல் கொடுத்த அண்ணன் சிவராஜ்குமார்
Published on

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நடிப்பில் உருவான ஜேம்ஸ் திரைப்படத்தில், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்துள்ளார், அவரது அண்ணன் நடிகர் சிவராஜ்குமார்.

கன்னட சினிமா நடிகர் மற்றும் தயாரிப்பாளரான புனித் ராஜ்குமார், மாரடைப்பு காரணமாக கடந்த அக்டோபர் மாத இறுதியில் காலமானார். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன்தான் புனித் ராஜ்குமார். புனித், 29 படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ளார். இவற்றில் புனித் ராஜ்குமாரின் நடிப்பில் இறுதியாக தயாராகி வந்த திரைப்படம், ஜேம்ஸ்.

கன்னட திரைப்படமான இப்படத்திற்கான படப்பிடிப்புகள் ஏற்கெனவே நிறைவடந்திருந்தன. இருப்பினும் டப்பிங் உள்ளிட்ட பணிகள் நடக்காமல் இருந்தன. டப்பிங் பணிகள் தொடங்கப்பட இருந்த காலகட்டத்தில்தான், நடிகர் புனித் ராஜ்குமாருக்கு எதிர்பாராவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார். அவர் மறைவுக்கு சில காலத்துக்குப் பின் அப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கின. அப்போது புனித் ராஜ்குமார் கதாபாத்திரத்துக்கு யார் குரல் கொடுப்பது என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதற்கு விடைகிடைத்துள்ளது.

ஆம், புனித் ராஜ்குமாருக்கு அவருடைய அண்ணனும் கன்னட நடிகருமான சிவராஜ்குமார்தான் குரல் கொடுகின்றார். தற்போது வேதா என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சிவராஜ்குமார், தனது பணிக்கு இடையில் புனித் ராஜ்குமாருக்கு குரல் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து ஆங்கில தளத்துக்கு சிவராஜ்குமார் பேட்டியளித்துள்ளார்.

தனது பேட்டியில் நடிகர் சிவராஜ்குமார், “என் தம்பியின் படத்தில், அவருக்காக நான் குரல் கொடுத்ததென்பது, மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணமாக இருந்தது. புனித்தை திரையில் பார்த்தபோதும், என்னால் முழுமையாக அமர்ந்து அந்த தருணங்களை எதிர்கொள்ள முடியவில்லை. அவரது இழப்பு, அவ்வளவு கடினமாக இருந்தது.

இன்னொரு பக்கம், என்னால் புனித்தின் குரலுக்கு ஈடுகொடுத்து பேச முடியவில்லை. மிகவும் சிரமப்படேன். கிட்டத்தட்ட இரண்டரை நாள் அவகாசம் எடுத்த பின்னர்தான், ஓரளவு புனித்தின் குரலுக்கு ஈடுகொடுக்க முடிந்தது. தற்போது புனித் ஏற்று நடித்திருந்த பகுதிக்கான என்னுடைய டப்பிங் பணிகள் முடிவடைந்துவிட்டன. என்னால் முடிந்தளவு சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறேன். ரசிகர்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன்” என எமோஷனலாக பேசியுள்ளார்.

படத்தை வரும் மார்ச் 17-ம் தேதி, மறைந்த புனித் ராஜ்குமாரின் பிறந்தநாளன்று திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜேம்ஸ் திரைப்படம், ஆக்‌ஷன் எண்டர்டெய்னராக இருக்குமென சொல்லப்படுகிறது. இப்படத்தை சேத்தன் குமார் என்பவர் இயக்க, கிஷோர் பதிகோண்டா தயாரித்துள்ளார். ஜேம்ஸ் திரைக்கு வருவதையொட்டி, அந்த வாரம் வேறெந்த திரைப்படமும் வெளியிடப்படப்படவில்லை என்றும் கன்னட செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com