ரசிகர்களை கதறவிட்ட இந்தியன் தாத்தா.. ஆனாலும் 3 நாட்களில் 100 கோடி வசூலை கடந்ததா Indian2? முழு விவரம்

இந்தியன் படத்தின் 2ம் பாகம் வெளியாகி இன்றோடு 4 நாட்கள் ஆன நிலையில், பல கெட்டப்புகளில் வந்த இந்தியன் தாத்தா, 3 நாட்களில் செய்த வசூல் என்ன என்பதை பார்க்கலாம்.
indian 2
indian 2pt
Published on

மசாலா கொஞ்சம் தூக்கல்!

ஒரு புளிக் கொழம்பு வைக்கிறீர்கள் என்றால், அதில் புளிக்கரைசல்தானே பிரதானமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து மசாலா, மிளகாய்த்தூளை அதிகம் சேர்த்துவிட்டு ஒரே ஒரு கொட்டை புளியை மட்டும் கரைத்து சேர்த்துவிட்டு, மசாலா பாக்கெட்டுகள் நிறைய இருக்கிறதே என்று அத்தனையையும் கொட்டி, குழம்பு வைத்தால் அது எப்படி சுவைக்கும். ஏன் சொல்ல வருகிறேன் என்றால், இத்தனையும் எழுத வைத்த பெருமை இந்தியன் தாத்தாவை 28 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு கொண்டு வந்த இயக்குநர் ஷங்கருக்கே சேரும்.

ஆம், படத்திற்கு தேவையான கதைக்கருவை விட்டுவிட்டு பிரமாண்டம், கிராபிக்ஸ், மேக்கப், பில்டப், வர்மம் என்று மசாலாக்களை மட்டும் அள்ளித்தூவி, கதைக்கரு என்ற புளியை கொஞ்சமாக கலந்து இதுதான் சிறப்பான புளிக்குழம்பு (இந்தியன் - 2) படம் என்று வெளியிட்டிருக்கிறார் பிரமாண்ட படங்களின் சொந்தக்காரர் சங்கர்.

indian 2
கைதி 2-வில் நடிகர் விஜய் இருப்பாரா? வெளியான முக்கிய தகவல்...!

இந்தியன் VS இந்தியன் -2

சரி, வசூல் என்ன என்ற கதைக்கு வருவோம். அனைவருக்கும் தெரிந்தது போல, 1996ம் ஆண்டு இந்தியன் படத்தை திரைக்கு கொண்டு வந்து 90ல் என் படம்தான் பேசுபொருள் என்று அசத்தி இருந்தார் இயக்குநர் ஷங்கர். சேனாதிபதியாக, சந்துருவாக தந்தை மகன் வேடங்களில் நடித்து மூக்கு மேல் விரல் வைப்பது போல கெட்டப்பிலும் சரி, நடிப்பிலும் சரி நையப்புடைத்திருந்தார் கமல். பின்னணி இசை, பாடல் என்று ஏ.ஆர் ரகுமான் செய்த மேஜிக் வேறு. அத்தனையும் கச்சிதமாக அமைய, வெற்றிநடை போட்டது இந்தியன்.

தொடர்ந்து, பல ஆண்டுகால எதிர்பார்க்குப் பிறகு, சரியாக ஜூலை 12, 2024ல் உலகம் முழுவதிலும் ரீ என்ட்ரி கொடுத்தார் இந்தியன் தாத்தா. வெளிநாட்டுக்குப் போன இந்தியன் தாத்தா மீண்டும் வந்துவிட்டாரே என்று தியேட்டருக்குப் போனவர்களை, படத்தின் பாடல் பாணியிலேயே கதறவிட்டு அனுப்பியது இந்தியன் - 2. ஏற்கனவே சொன்னதுபோல, பிரமாண்டம், பில்டப் என அத்தனை மசாலாக்களையும் கலந்து ஊழல் ஒழிப்பை வேறு மாதிரியாக காட்டியிருக்கிறார் ஷங்கர்.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘கம்பேக் இந்தியன்’ என்ற ஹாஸ்டேகை போட்டவர்கள், மூன்று மணி நேரம் படத்தை பார்த்துவிட்டு, போட்ட ஸ்டோரியை டெலிட் செய்துவிட்டு ‘கோ பேக் இந்தியன்’ என்று சொல்லும் அளவுக்கு கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது இந்தியன் - 2.

indian 2
‘ஜனவரி மாதமே முயற்சி செய்தேன்..’ - மறைந்த பாடலாசிரியர் ரவி ஷங்கரின் உருக்கமான கடைசி கடிதம்!

100 கோடி வசூலை கடந்த இந்தியன் -2?

சுமார் 250 கோடி ரூபாய் பெட்ஜெட்டில் சித்தார்த், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இந்தியன் - 2, முதல் நாளில் மட்டும் ₹25.6 கோடியும், 2ம் நாளில் ₹18.2 கோடியும் தொடர்ந்து 3ம் நாளான ஞாயிறு அன்று 15.35 கோடியும் இந்திய அளவில் வசூலித்துள்ளதாக தெரிகிறது. இந்திய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் வசூலைப் பார்த்தால் படம் இதுவரை 109.15 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழில் மட்டும் ₹41.2 கோடி, தெலுங்கில் ₹13.9 கோடி மற்றும் இந்தியில் ₹3.8 கோடியை வசூல் செய்துள்ளது இந்தியன் -2. தொடர்ச்சியாக கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருப்பதால், வார இறுதியிலும் குறைவான வசூலையே பெற்றிருக்கிறது இந்தியன் -2.

indian 2
'கூலி' திரைப்படம் LCU-வில் வருமா? லோகேஷ் கனகராஜ் சொன்ன அப்டேட்!

விக்ரமின் சாதனை.. இந்தியன் -2-ன் வேதனை!

2 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் வெளியான கமலின் விக்ரம் படம் முதல் நாளிலேயே சர்வதேச அளவில் 48 கோடி ரூபாயை வசூல் செய்திருந்தது. 2ம் நாளில் 36 கோடி மற்றும் மூன்றாம் நாளில் 33 கோடி ரூபாயை வசூல் செய்தது. உலகம் முழுவதிலும் மூன்று நாட்களிலேயே 150 கோடியை வசூல் செய்திருந்தது விக்ரம். தொடர்ச்சியாக வந்த நேர்மறை விமர்சனங்களால் சுமார் 430 கோடி ரூபாயை வசூல் செய்தது.

அத்தனை பெரிய எதிர்பார்ப்புகளே இல்லாமல் விக்ரம் சைலன்ட்டாக சாதனை படைத்த நிலையில், 4 ஆண்டுகால காத்திருப்புக்கு(இந்தியன் 2 பட முதல் போஸ்டர் 2020ல் வெளியானது) பின் ரிலீஸ் ஆன இந்தியன் -2 குறைவான வசூலையே பெற்றுள்ளது. படத்தில் இருந்து தற்போது 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதால், இனி பார்வையாளர்களின் விமர்சனத்தைப் பொருத்து படம் மீண்டெழுமா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

முன்னதாக, விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. ஆனாலும், சுமார் 600 கோடி ரூபாய் அந்தப் படம் வசூல் ஈட்டியது. ஆனால், இந்தியன் 2 திரைப்படம் இந்த வாரத்தை தாண்டி ஓடினால் தான் தெரியும் எவ்வளவும் வசூல் ஆகும் என்று. பொருத்திருந்து பார்க்கலாம்.

எழுத்து: யுவபுருஷ்

indian 2
INDIAN 2 | ஏன் ஷங்கர்... ஏன் கமல்... இதற்கா இத்தனை பில்ட் அப்..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com