நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷகிலா நடித்துள்ள, ’ஷீலாவதி’ என்ற படத்துக்கு தணிக்கைக் குழு அனுமதி மறுத்துள்ளது.
ஷகிலா, தனது 16 வயதில் மலையாள சினிமாவில் அறிமுகமானவர். பிறகு தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் விரைவிலேயே பிரபலம் அடைந்தார். எந்த டாப் ஹீரோக்களுடன் நடிக்காமல் தனித்து சாதிக்க முயன்று வெற்றி பெற்றவர். மலையாளத்தில் அவர் நடித்த படங்கள் முன்னணி ஹீரோ படங்களின் வசூலை தாண்டிச் சென்றது. இதனால் கோபமான சில ஹீரோக்கள், ஷகிலா படங்கள் கவர்ச்சியாக இருப்பதால் கேரளாவில் தடை விதிக்க வேண்டும் என்று கூறினர். இதையும் தாண்டி சாதித்தார் ஷகிலா.
இந்நிலையில், அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ’சீலாவதி’ (தூய்மையானவள்) என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இது அவரது 250-வது படம். கேரளாவில் நடந்த பல பாலியல் உண்மைச் சம்பவங்களை வைத்து இந்தக் கதை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது சர்ச் சைக்குரிய கதை என்று கூறி தணிக்கைக் குழு இந்தப் படத்துக்கு தடை விதித்துள்ளது.
இதுபற்றி கூறியுள்ள ஷகிலா, ‘படத்தைப் பார்க்காமலேயே அதற்கு தடை விதித்திருப்பது ஏற்புடையதல்ல. இந்தப் படத்துக்கு ஷீலாவதி என்ற டைட்டில் பொருத்தமற்றது என்பதை தணிக்கைக் குழு எப்படி கூற முடியும் என்றும் தெரியவில்லை. படத்தை பார்த்துவிட்டு அவர்கள் கருத்துச் சொன்னால் கூட ஏற்பதா வேண்டாமா என்று கூற முடியும். அப்படியிருக்கும்போது தன்னிச்சையாக இப்படி முடிவெடுப்பதை ஏற்க முடியாது. தணிக்கை குழு, தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ரசிகர்களும் தங்கள் ஆதரவை தெரிவிக்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.