தடைகளைமீறி ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியானது. சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு (ஹீரோவாக) ஷாருக்கானின் ‘பதான்’ படம் வெளியாவதால் ஆரம்பத்திலேயே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வந்தது. மேலும், இந்தப் படத்தின் ‘பேஷ்ரங்’ பாடலில் உள்ள வரிகள் மற்றும் தீபிகா படுகோனே உடையில் காவி நிறம் ஆகியவற்றால் சர்ச்சை எழுந்து அதுவே படத்திற்கு பெரிய ப்ரமோஷனாகவும் அமைந்ததாலும், கடந்த 2 வருடங்களாக பாலிவுட்டில் ‘BoycottBollywood’ ட்ரெண்ட் வேறு இருந்து வந்ததால், இந்தப் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என பாலிவுட் திரையுலகினர் காத்திருந்தனர்.
இந்நிலையில், எல்லாத்தையும் முறியடித்து சுமார் 27 நாட்களில் இந்தப் படம் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் வெளிவந்து 1000 கோடி ரூபாய் வசூலித்தப் படங்களில் 5வது இடத்தை ‘பதான்’ திரைப்படம் பிடித்துள்ளது.
2016-ம் ஆண்டு வெளியான அமீர்கானின் ‘தங்கல்’ திரைப்படம் 2112 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ 1811 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் 1217 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்திலும், யஷ்ஷின் ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் 1198 கோடி ரூபாயுடன் 4-வது இடத்திலும் உள்ளன.
மேலும், இந்தியாவில் மட்டுமான வசூலில், அமீர்கானின் ‘தங்கல்’ படத்தை ‘பதான்’ திரைப்படம் முந்தியுள்ளது. ‘பதான்’ திரைப்படம் 623 கோடி ரூபாய் பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் ‘தங்கல்’ திரைப்படம் இந்தியில் 538 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருந்தது. தற்போதும் திரையரங்குகளில் ‘பதான்’ திரைப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால், மேலும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.