‘ராஜா ராணி’ படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் அட்லீ. இயக்கிய திரைப்படங்களை வெற்றிப் படங்களாக மட்டுமே தந்த இவர் தற்போது இந்தியில் ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு, சிறப்புத் தோற்றத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜவான்’ படம், இயக்குநர் அட்லீ, நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு பாலிவுட்டில் அறிமுகப் படம் என்பதால் ஏராளமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இப்படத்தின் pre release event நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் கலை அரங்கில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் ரசிகர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் வரவேற்றார்.
இந்நிகழ்வில் இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், “என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கும், பூஜா தட்லானி மற்றும் கௌரி கான் ஆகியோருக்கும் நன்றி. பாடலாசிரியர் விவேக் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார். அவருடைய ஈடுபாட்டின் காரணமாக இந்த படத்தின் பாடல்கள் ஒரு ரீமேக் படத்தின் பாடல்கள் போலில்லாமல், அசல் தமிழ் படத்தின் பாடல்களைப் போல் எழுதியிருக்கிறார். இதனால் ஷாருக்கான் இவரது பாடல் வரிக்கு வாயசைத்து நடனமாடி இருக்கிறார்.
என்னுடைய சகோதரர்.. இயக்குநர் அட்லீக்கும் நன்றி. சென்னையிலிருந்து மும்பைக்கு இயக்குநர்கள் ரீமேக்கிற்காக சென்றிருக்கிறார்கள். ஆனால் சென்னையிலிருந்து புறப்பட்டு இந்தியாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை சந்தித்து, கதை சொல்லி, அவரது தயாரிப்பில் படத்தை இயக்குவது என்பது சாதாரண விசயமல்ல. சவாலானது. அதற்கு அவருக்கு நாம் அனைவரும் கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
அவர் மட்டும் பணியாற்றாமல்.. அவரை நம்பி இருந்த எடிட்டர், கேமராமேன், டான்ஸ் மாஸ்டர், ஃபைட் மாஸ்டர்.. ஆர்ட் டைரக்டர் என எல்லோரையும் அழைத்துச் சென்று தன்னுடன் பணியாற்ற வைத்திருக்கிறார். அதிலும் பத்து ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் என்னை பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அனைவரும் கடினமாக உழைத்து ஜவானை உருவாக்கி இருக்கிறோம்.
வாழ்க்கையில் சில விசயங்கள் நடக்குமா.. என எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அதைவிட முதலில் இசையமைப்பாளராக வருவேனா..! என்பதே சந்தேகமாக இருந்தது. தற்போது இசையமைப்பாளராகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் அதுவும் ஷாருக் கான் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அங்கு அறிமுகமாகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கிங் கான் ஷாருக். நான் உங்களை மிஸ் செய்கிறேன். நீங்கள் தினமும் இரவில் ஃபேஸ் டைம் இணைப்பில் வருகை தந்து ஒரு மணி நேரம் பேசுவீர்கள். அந்த பேச்சை தற்போது மிஸ் செய்கிறேன்.
ஷாருக் கான் மிகவும் அன்பானவர். குடும்பத்தில் ஒருவராக பழகக் கூடியவர். ஒரு முறை லண்டனுக்கு சென்றிருந்தபோது.. அங்கு அவர் எனக்காக ஷாப்பிங் சென்று, அங்கிருந்து எனக்கு போன் செய்து.. என் உடை அளவை தெரிந்து கொண்டு, எனக்காக பிரத்தியேகமாக ஆடையை வாங்கி பரிசாக அளித்தார். அந்த அன்பு ஈடு இணையற்றது.
இந்த படத்தில் ஷாருக்- அட்லீ இணைந்திருப்பதால் இந்தப் படத்தை இந்தி திரைப்படமாக பார்க்காமல்.. இந்திய சினிமாவாக கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.