இந்தி நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் நடித்துள்ள ஆங்கிலப் படத்தின் டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இந்தி சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுக்கு ஆர்யன் கான், அப்ரம் கான் என்ற மகன்களும் சுஹானா கான் என்ற மகளும் உள்ளனர். இதில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதை சிறு வயது முதலே லட்சியமாகக் கொண்டிருந்த சுஹானா, லண்டனில் உள்ள கல்லூரி ஒன்றில் நடிப்பு பயிற்சிப் பெற்றார். இப்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடிப்புப் பயிற்சி பெற்றுவருகிறார்.
அவர், தற்போது ஆங்கில குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். ’The Grey Part Of Blue' என்ற அந்தக் குறும்படத்தை அவரது லண்டன் நடிப்புப் பள்ளித் தோழர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து பாலி வுட் பிரபலங்கள் பாராட்டுகளை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த படத்தின் இயக்குனர் தியோடர், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த டீசருக்கு கீழே, ’த கிரே பார்ட் ஆப் புளு’ படத்தின் சில காட்சிகளை வெளியிட்டிருக்கிறோம். படம் முடிந்துவிட்டது. ரிலீஸ் தேதி எப்போது என்பது எனக்குத் தெரியாது. தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்களுக்கு நன்றி. படம் வெளியாகும் வரை இந்த சின்ன டீசரை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.