பல வெற்றிப்படங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியவர்... இந்த வருடம் தன் நடன இயக்கத்துக்காக தேசிய விருதும் பெற்றவர்.. என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் ஜானி மாஸ்டர். இவர் தற்போது பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அப்புகாரை அளித்த பெண், இந்த குற்றத்தில் ஜானி மாஸ்டரின் மனைவியும் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து இவ்விவகாரம் திரைத்துரையில் புயலை கிளப்பியுள்ளது. என்ன நடந்தது இதில்? விரிவாகப் பார்க்கலாம்...
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்குநராக இருப்பவர்தான் நடன இயக்குநர் ஜானி. தனுஷ் நடித்த மாரி 2 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் அரபிக் குத்து, ஜாலி ஓ ஜிம்கானா, ரஞ்சிதமே, காவாலையா என பல பிரபல தமிழ் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி உள்ளார். தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் “மேகம் கருக்காதா” என்ற பாடலுக்கு நடனம் இயக்கி, இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட தேசிய விருதில் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் மீது, 21 வயது சக பெண் நடனக்கலைஞர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் திரைப்பட நடனக் கலைஞரான பெண் ஒருவர்தான், ஜானி மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.
தன் புகாரில் அப்பெண், “ஜானி மாஸ்டர் அவரது குழுவில் உதவி நடன இயக்குனராக சேரும்படி என்னை 2019-ல் கேட்டார். அதன்பேரில்தான் அவரின் நடனக்குழுவில் இணைந்தேன். பின் உதவி நடன இயக்குனராக பணியாற்றுவதற்காக சென்னை, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு படப்பிற்காக சென்றுள்ளேன். அச்சமயங்களில் ஓட்டலில் வைத்து என்னை ஜானி மாஸ்டர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் புகாரில், அதிர்ச்சி தரும் பல தகவல்கள் கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதன்படி, சில நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய இப்பெண் அடையாளம் தெரியாத நபர்களால் மிரட்டப்பட்டதாகவும், ஆகஸ்ட் 28 ஆம் தேதி தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்று டெலிவரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மட்டுமன்றி தன்னை வேறு இடங்களில் பணியாற்ற ஜானி மாஸ்டர் அனுமதிக்கவில்லை எனவும், மீறி தான் தனியாக எங்கும் வெளி நிறுவனங்களில் வேலை செய்ய சென்றுவிட்டால் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து, ‘உனக்கு எந்த சலுகையும் கிடைக்காமல் செய்து விடுவேன்’ என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றியெல்லாம் யாரிடமாவது கூறினால், உன் வாழ்க்கையையே அளித்துவிடுவேன் என்று ஜானி மிரட்டியதாகவும், பல சந்தர்ப்பங்களில் தனது வீட்டிற்கு வந்து ஜானி பல பொருட்களை எடுத்துச்சென்றதாகவும் அப்பெண் கூறியுள்ளார். இதற்கெல்லாம் உச்சமாக, ஒரு நாள் ஜானியுடன் அவரது மனைவியும் தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார் புகாரளித்த பெண்.
இந்தப் புகாரின் அடிப்படையில், தற்போது ஆந்திர மாநிலம் ராயதுர்கம் காவல் துறையினர் இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 376, பிரிவு 506, பிரிவு 323 ஆகிய பிரிவுகளின் கீழ் ஜானி மாஸ்டர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட பெண், கடந்த காலங்களில் என குறிப்பிடும் சம்பவங்களில் சில அவரது 18 வயதுக்கு குறைவாகவும் உள்ளதாக தெரிகிறது. ஆகவே ஜானி மீது போக்ஸோவும் பதிய ஆலோசிக்கப்படுவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த பாலியல் புகார் எதிரொலியாக, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் உறுப்பினராக இருக்கும் ஜானி “ஜனசேனா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்” என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.