ஓவியர், நடிகர், சொற்பொழிவாளர் என பன்முகத்தன்மை கொண்ட சிவக்குமாருக்கு இன்று பிறந்தநாள். இந்த நாளில் அவரது வாழ்க்கையையும் அதில் ஏற்பட்ட சில அனுபவங்களையும் பார்க்கலாம்.
1941ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி கோவை மாவட்டத்தில் பிறந்தார் சிவக்குமார். அவரது இயற்பெயர் பாலதண்டபாணி. அது பழனிசாமியாக மாறி பின்னர் சிவக்குமார் ஆனது. பிறந்தது முதல் 14 வயது வரை 14 படங்களை மட்டுமே பார்த்த சிவக்குமார், பின்னாட்களில் நடிகனாகி 14 ஆண்டுகளில் 100 படங்களில் நடித்தார். சிறு வயது முதலே ஓவியத்தின் மீது ஆர்வம் கொண்ட சிவக்குமார் சென்னை கவின் கலைக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அங்கு நடைபெற்ற ஆண்டுவிழாவில் 'அனார்க்கலி' படத்தில் இடம்பெற்ற வசனத்தைப் பேசி நடித்தார். அதைப்பார்த்த ஆசிரியர் ஒருவர் சிவக்குமாருக்குள் இருந்த நடிப்புத் திறமையைக் கண்டு திரைத்துறையை நோக்கி அவரது வாழ்வை திருப்பினார்.
இயக்குநர் ஸ்ரீதர் 'காதலிக்க நேரமில்லை' படத்துக்காக புதுமுகத்தை தேடிய போது தனது புகைப்படத்தை அனுப்பி வைத்தார் சிவக்குமார். ஆனால் அந்த வாய்ப்பு ரவிச்சந்திரனுக்கு கிடைத்தது. அதனால் வேறு வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்த போது சிவக்குமாரின் உறவினர் ஒருவரே 'சித்ரா பௌர்ணமி' என்ற படத்தை தயாரிக்க அதில் நடித்தார். கிருஷ்ணன் - பஞ்சு இயக்கிய அந்தப்படம் பாதிலேயே நின்று போனது. இருந்தாலும் அவர்களின் பரிந்துரையின் பேரில் ஏ.வி.எம். தயாரித்த காக்கும் கரங்கள் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது. புதுமுகம் என்பதால் சிவக்குமாருக்கு 'காக்கும் கரங்கள்' படத்தின் இணை இயக்குநர் நடிப்பு பயிற்சி கொடுத்துள்ளார்.
"ராதா, உன் முகத்த நீ கண்ணாடில பார்த்தது இல்லையா? நீ அழகானவன்னு உங்க அண்ணனும் அம்மாவும் உன்கிட்ட சொன்னது இல்லையா?"
- இதுதான் 'காக்கும் கரங்கள்' படத்தில் சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட முதல் வசனம். அதை பேசிக்காட்டும்படி இணை இயக்குநர் கூற…
சிவக்குமார்: ராதா...
இணை இயக்குநர்: இப்ப எதுக்கு சிரிச்சுக்கிட்டே சொல்ற?
சிவக்குமார்: ராதா...
இணை இயக்குநர்: ஏன் சோகமா சொல்ற?
சிவக்குமார்: ராதா...
இணை இயக்குநர்: புருவத்த ஏன் தூக்குண?
சிவக்குமார்: ராதா...
இணை இயக்குநர்: தலைய ஏன் சாய்க்கிற?
சிவக்குமார்: ராதா...
இணை இயக்குநர்: டயலாக் நாபிக்கமலத்துல இருந்து வரணும்...
இப்படியாக முடிந்திருக்கிறது அன்றைய ஒத்திகை. அடுத்த நாள் மேக்கப் டெஸ்ட்டின் போது உதவி இயக்குநர் கிளாப் அடிக்க அந்த சத்தத்தில் வசனத்தை மறந்துவிட்டார் சிவக்குமார். இப்படி பல களேபரங்களுக்குப் பிறகு ஒருவழியாக 'காக்கும் கரங்கள்' வெளியானது. திரையரங்குக்குச் சென்று படம் பார்த்த சிவக்குமார் தான் நடித்த சில காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதைக் கண்டு கண்ணீர்விட்டாராம்.
'காக்கும் கரங்கள்'-ஐத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தாலும் தோற்றத்தில் முதிர்ச்சி இல்லாத காரணத்தால் சரியான கதாபாத்திரங்கள் கிடைக்காமல் தவித்த சிவக்குமாருக்கு கை கொடுத்தன கடவுள் வேடங்கள். 'கந்தன் கருணை'-ல் சிவக்குமார் முருகனாக நடித்ததைப் பார்த்த அப்படத்தின் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் "இன்னும் 25 ஆண்டுகளுக்கு கடவுள் வேடத்தில் உன்னை அடித்துக்கொள்ள யாருமில்லை" என்றாராம்.
படங்களில் நடித்துக்கொண்டே சொந்தமாக நாடகக் கம்பெனி தொடங்கிய சிவக்குமார், சில காரணங்களால் அதை மூடிவிட்டார். பின் நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் நாடகக்குழுவில் இணைந்து 8 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்மூலம் நடிப்பை கற்றுக்கொண்டதாக பல மேடைகளில் சொல்லியிருக்கிறார்.
பரபரப்பாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது நாடக ஒத்திகைக்கு வரமுடியாது என்பதால் அதன் மொத்த ஸ்கிரிப்டையும் வாங்கி மனப்பாடம் செய்து விடுவாராம். அந்தப் பழக்கம்தான் பிற்காலத்தில் இலக்கியப் பாடல்களை மனப்பாடம் செய்ய உதவியது எனக்கூறியுள்ளார் சிவக்குமார்.
1970-களில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய சிவக்குமார், பின்னர் வில்லன், குணச்சித்திரம் என பல கதாபாத்திரங்களில் கலக்கியிருக்கிறார். ஒருகட்டத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து அதிலும் வெற்றிக்கொடி நாட்டினார். இன்னும் சொல்லப்போனால் சீரியலில் நடித்த பிறகே சொந்தமாக புதுக்கார் வாங்கினார் சிவக்குமார். அதற்கு முன்பு அவர் வைத்திருந்ததெல்லாம் செகண்ட் ஹேண்ட் கார்களே.
2005ஆம் ஆண்டு சீரியலில் ஒரு முக்கியமான காட்சியில் சிவக்குமார் நடித்துக் கொண்டிருந்த போது அருகில் ஒரு இளம் நடிகை தொலைபேசியில் யாருடனோ சத்தமாக பேசிக்கொண்டிருந்தாராம். அதைக்கண்டு அவர் கோபப்பட, "இது என்ன லைவ் ரெக்கார்டிங்கா? எப்படியும் டப்பிங் பேச தானே போறீங்க, அப்பறம் எதுக்கு ஆத்திரப்படுறீங்க" என அந்த நடிகை கேட்டுள்ளார். மூத்த நடிகரான தமக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற எண்ணத்தை அந்நிகழ்வு ஏற்படுத்த அன்றோடு நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டார்.
திரைத்துறையில் இருந்து விலகிய சிவக்குமாரை சொற்பொழிவு பக்கம் திருப்பியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. அவரது வற்புறுத்தலின் பேரில் மதுரை கம்பன் கழகத்தில் ராமாயணம் பற்றி பேசினார் சிவக்குமார். அதைத்தொடர்ந்து ராமாயணம் மற்றும் மகாபாரதம் குறித்து சொற்பொழிவாற்றி வருகிறார்.
திரைத்துறையில் ஒழுக்கத்துக்கு பெயர் போனவர் சிவக்குமார். ஒரு முறை உங்கள் குழந்தைகளை எப்படி வளர்த்தீர்கள் எனக்கேட்டதற்கு, "எப்படி வாழ வேண்டும் என நானும் என் மனைவியும் பிள்ளைகளுக்கு வாழ்ந்து காண்பித்தோம்" என பதிலளித்தார். ஆம் அதுதான் சிவக்குமார்.
- மு.கவியரசன்