பிரபல குணச்சித்திர பீலி சிவம் காலமானார்

பிரபல குணச்சித்திர பீலி சிவம் காலமானார்
பிரபல குணச்சித்திர பீலி சிவம் காலமானார்
Published on

பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம் இன்று உடல்நலக் குறைவால் மதுரையில் காலமானார். 

பி.எல்.சின்னப்பன் என்ற பெயரை சினிமாவுக்காக பீலி சிவம் என்று மாற்றிக்கொண்டவர் பீலி சிவம். அவருக்கு 80 வயது. 1938ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி பிறந்தார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். 

முகமது பின் துக்ளக், அபிமன்யு, தங்க பாப்பா போன்ற பழைய ஹிட் படங்களில் நடித்த இவர் பிற்காலத்தில் சின்னத்திரையிலும் வலம் வந்தார். இவர் நடித்த உறவுகள் சீரியல் புகழ்பெற்றது. குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். இளமையில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் முன் நாடகங்களிலும் நடத்துள்ளார். 1995ஆம் ஆண்டு தமிழக அரசு நாடகத்துறையில் இவருக்கு சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது வழங்கியது. 2009ம் ஆண்டு தமிழக அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.  

நாடகத்தில் நடித்த காலத்தில் பீலிசிவம் சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் இருந்திருக்கிறார். அப்போது அவரது நெருங்கிய நண்பராக இருந்தவர் கவுண்டமணி.  அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டம் பற்றி பீலி சிவத்தின் பேட்டி ஒன்று சினிமா வட்டாரத்தில் மிகவும் பிரபலமானது.
அந்தப் பேட்டியில் "நானும் கவுண்டமணியும் சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்த காலம் அது. கவுண்டமணி என் உயிர் நண்பன். ஒருநாள் இரவு, வீதியில் நடந்து கொண்டு இருந்தோம். இருவரும் அன்று சாப்பிடவில்லை. எனக்கு கடும் பசி. அவனிடம் சொன்னேன். இருவரிடமும் பணம் இல்லை. கவுண்டமணி என்னிடம் 'சிறிது நேரம் பொறுத்திரு. இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு சென்றான். ஒரு சில மணி நேரம் கழித்து கையில் பரோட்டா பொட்டலத்துடன் வந்தான். அதை என் கையில் தந்து விட்டு சாப்பிட சொன்னான். 'உன்னிடம் தான் பணம் இல்லையே? எப்படி வாங்கினாய்?' என்று கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை. நான் தொடர்ந்து வற்புறுத்தி கேட்டேன். "அருகிலுள்ள ரத்த வங்கிக்கு சென்று  ரத்தத்தை கொடுத்த கிடைத்த பணத்தில் வாங்கினேன்" என்றான். என் கண்கள் கலங்கி விட்டன. நண்பன் பசிக்காக தன் ரத்தத்தை விற்று உணவு தந்த அவனை என் வாழ்நாளில் எப்படி மறப்பேன்" என்று கூறியிருந்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com