ஆகஸ்ட் மாதம் நடந்திருக்க வேண்டிய மறக்குமா நெஞ்சம் எனும் ரஹ்மானின் இசைக் கச்சேரி மழை காரணமாக, நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு சில மணி நேரம் முன்பு ஒத்திவைக்கப்பட்டது. ரசிகர்களின் பாதுகாப்பு முக்கியம் என ரஹ்மானே ட்விட் செய்ததால், அடுத்த நிகழ்ச்சியின் தேதி அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
செப்டம்பர் 10ம் தேதி அதே இடத்தில் நடத்தப்படும் என்றும் கச்சேரி திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிப்பு வந்தது. ஆகஸ்ட் மாத நிகழ்ச்சிக்கே எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்த நிலையில் செப்டம்பர் 10 ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் வரை டிக்கெட்கள் இணையத்தில் கிடைத்தது பல குளறுபடிகளை ஏற்படுத்தியது.
மேலும், 2000, 5000 என செலவு செய்து வந்தவர்களிடம் கார்பார்க்கிங், பைக் பார்க்கிங் என தனித்தனியே கட்டணமும் வசூலிக்கப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க மெயின் கேட் மட்டுமின்றி பல்வேறு பாதைகளைப் பயன்படுத்தி பலரும் உள்ளே நுழைந்துள்ளனர். இதனால் டிக்கெட் வாங்கியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கூட்டம் எல்லை மீற டிக்கெட் வாங்கியவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
விலை உயர்ந்த டிக்கெட்களை வாங்கியவர்களாலும் உள்ளே நுழைய முடியாதபடி கூட்டம் அளவுக்கு அதிகமானது. பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இது குறித்து குறைந்தபட்ச விளக்கமோ, மன்னிப்போ கேட்கவேண்டும் என்பது தான் பலரின் எண்ணமாக இருந்தது.
இந்நிலையில் கான்சர்ட்டில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர். திட்டமிட்டதை விட அதிக ரசிகர்கள் குவிந்ததால் குழப்பம் ஏற்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு முழு பொறுப்பு ஏற்பதாக ஏசிடிசி நிறுவனம் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானும் எக்ஸ் தளத்தில் இந்நிகழ்வு குறித்து பகிர்ந்துள்ளார், “டியர் சென்னை மக்களே, டிக்கெட் வாங்கியும் எதிர்பாராத சூழ்நிலையால் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வரமுடியாதவர்கள் நீங்கள் வாங்கிய டிக்கெட் நகலை arr4chennai@btos.in என்ற மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள். உடன் உங்களது குறைகளையும் கூறினால் எங்கள் குழு தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.