”பேத்திக்காக பாட்டி நடத்தும் போராட்டம்” - ரசிகர்களை கவர்ந்ததா ‘செம்பி’? - திரைப்பார்வை

”பேத்திக்காக பாட்டி நடத்தும் போராட்டம்” - ரசிகர்களை கவர்ந்ததா ‘செம்பி’? - திரைப்பார்வை
”பேத்திக்காக பாட்டி நடத்தும் போராட்டம்” - ரசிகர்களை கவர்ந்ததா ‘செம்பி’? - திரைப்பார்வை
Published on

பேத்திக்காக ஒரு பாட்டி நடத்தும் போராட்டம் தான் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும்`செம்பி’ படத்தின் ஒன்லைன்.

கொடைக்கானல், புலியூரில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் வீரத்தாயி (கோவை சரளா). அவரது பத்து வயது பேத்தி செம்பி (நிலா). மலையில் கிடைக்கும் தேன், கிழங்கு போன்றவற்றை எடுத்து சந்தையில் விற்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். தன்னுடைய மகள், மருமகனை இழந்தப்பின் பேத்திக்கு இருக்கும் ஒரே ஆதரவு தான் மட்டுமே, அவளை எப்படியாவது படிக்க வைத்து மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற கனவில் இருக்கிறார் பாட்டி வீரத்தாயி. ஆனால் அந்தக் கனவை சிதைப்பது போல, ஒரு அசம்பாவிதம் நடக்கிறது.

மூன்று பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறாள் சிறுமி செம்பி. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் எனக் கண்டுபிடித்து, அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார் வீரத்தாயி. ஆனால், ஒரு கொலை கேஸில் குற்றவாளியாக வீரத்தாயியையே போலீஸ் தேடுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா, வீரத்தாயியை போலீஸ் தேடுவது ஏன்? இந்தக் கதையில் அஷ்வின் குமாரின் பங்கு என்ன? என்பதை எல்லாம் சொல்கிறது `செம்பி’.

படத்தின் நிறைகள் எனப் பார்த்தால் பிரபு சாலமன் வழக்கம் போல மிக எளிமையான கதையை எடுத்துக் கொண்டு அதை அழுத்தமாக சொல்ல முயன்றிருக்கிறார். குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல், பழங்குடி இன மக்கள் நடத்தப்படும் விதம், பெண்கள் மேல் ஒழுக்கம் என்ற பெயரில் சுமத்தப்படும் பிற்போக்குத்தனங்கள் எனப் பலவற்றை கேள்வி கேட்பது படத்தின் ஹைலைட் என சொல்லலாம்.

நடிகர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் கோவை சரளா, அஷ்வின் குமார், தம்பி ராமையா என அனைவரும் சரியான பங்களிப்பை செய்திருக்கிறார்கள். சில இடங்களில் கோவை சரளா நடிப்பு பொருந்தவில்லை என்றாலும், எமோஷனலான காட்சிகளில் மிக அருமையாக நடித்திருக்கிறார். செம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலா நல்ல அறிமுகம். இவர்களுடன் சேர்த்து இன்னொரு கதாபாத்திரமும் பார்வையாளர்களை கவர்கிறது. பேருந்தில் இருக்கும் அனைவரையும் வாடா, போடவென அழைத்து அந்தக் கதாபாத்திரம் செய்யும் காமெடி படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

மலை சார்ந்தப் பகுதிகளை அதன் ஈரத்தோடு பதிவு செய்திருப்பது, ஒரே பேருந்துக்குள் சுவாரஸ்யமான கோணங்கள் பிடித்தது, சேசிங் காட்சிகளில் த்ரில் கொடுப்பது என ஒளிப்பதிவாளர் ஜீவன் அபாரமாக உழைத்திருக்கிறார். நிவேஸ் கே பிரசன்னா இசையில் ‘ஆத்தி என் மேல’ பாடல் மிக சிறப்பாக இருந்தது. சில எமோஷனல் காட்சிகளில் பின்னணி இசையால் வலு சேர்த்திருக்கிறார். இதைத் தாண்டி ஒரு ப்ளஸ், சமீபகாலமாக பல, பாலியல் குற்றங்களைப் பற்றிய படங்களில் சொல்லப்படும் அதே கருத்தை செம்பியும் வலியுறுத்தி இருப்பது. பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனையை எமோஷனலாக கையாளாமல், அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறது படம்.

‘செம்பி’ படத்தின் குறைகள் எனப் பார்த்தால், உணர்வு ரீதியாக முடிந்த வரை அழுத்தமாக கதையை பிரபு சாலமன் சொல்லியிருந்தாலும், லாஜிக்காக யோசித்தால் பல சிக்கல்கள் வருகிறது. ஒரு குறிப்பிட்ட காட்சியில், ஒரு பஸ்ஸுக்குள் மினி சைபர் க்ரைம் டீமே இருப்பது போன்று, விறுவிறுப்பாக நடக்கும் விஷயங்கள் எதுவும் நம்பும்படியாக இல்லை. அது கதையை தன் வசதிக்கு ஏற்ப இயக்குநர் எழுதிக் கொள்ள மட்டுமே உதவியிருக்கிறதே தவிர, கதையின் போக்கில் நிகழ்ந்த மாதிரி இல்லை.

சில எமோஷனலான காட்சிகள் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகி, அதிகப்படியாக காட்சிகள் நீட்டபட்ட உணர்வும் எழுகிறது. வில்லன்களாக காட்டப்பட்டிருக்கும் அந்த மூவரின் நடிப்பும் மிக செயற்கையாக துருத்திக் கொண்டு தெரிந்தது. இதையும் மீறி, அஷ்வின் குமார் நடித்திருக்கும் கதாபாத்திரம் சட்டத்தை பிரதிபலிப்பதாக வருகிறதா? அல்லது கடவுளைப் பிரதிபலிப்பதாக வருகிறதா என்ற குழப்பம் ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. இது போன்று நிறைகளும், குறைகளும் சேர்ந்தே தான் உருவாகியிருக்கிறது படம்.

இவற்றை சரி செய்திருந்தால், இந்த வருடத்தில் பாலியல் குற்றங்கள் பற்றிப் பேசிய, ‘கார்கி’, ‘அனல் மேலே பனித்துளி’ போன்ற படங்கள் போல குறிப்பிட்டு சொல்லும்படியான சினிமாவாக மாறியிருக்கும் இந்த ‘செம்பி’.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com