பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் 25 ஆவது படம் "சீதக்காதி". இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 80வயதுடைய முதியவர் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் போஸ்டர் முதல் முதலாக வெளியிட்டப்போதே விஜய் சேதுபதியின் லுக் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.
இந்நிலையில் நேற்று சீதக்காதி படத்தில் வரும் அய்யா எனும் கதாப்பாத்திரம், அதாவது விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரத்துக்கு தோற்றம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதற்கான மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இப்போது சமூக வலைத்தளங்களில் சீதக்காதி படத்தின் விஜய் சேதுபதி வயதான தோற்றம், அதன் மேக் அப் காட்சிகள் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
மேலும், இந்தப் படம் விஜய் சேதுபதியின் 25 ஆவது படம் என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன் ஏற்கெனவே விஜய் சேதுபதியை வைத்து "நடுவல கொஞ்சம் பக்கத்த காணோம்" என்ற ஹிட் படத்தை இயக்கியவர்.
இந்தத் திரைப்படம் குறித்து பேசிய விஜய் சேதுபதி " சீதக்காதி படத்தை கமல் போன்ற லெஜண்டுகள் நடிக்க வேண்டிய கதாப்பாத்திரத்தில் நான் நடிக்க இருக்கிறேன். பாலாஜி தரணீதரன் பல முன்னணி நடிகர்களிடம் கதை சொல்லிவிட்டு கடைசியாக என்னை இந்தப் படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார் என நினைக்கிறேன்.
சீதக்காதி என்ன மாதிரியான படம் என்றால் கலைக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை என்பதை உரக்கச் சொல்லும்" என்றார் அவர்.விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா இதில் நடித்திருக்கிறார். மகேந்திரன், பகவதி பெருமாள், ராஜ்குமார், பார்வதி நாயர், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் மிக வித்தியாசமாக இருக்க வேண்டும் என நினைத்த படக்குழு, பிளானட் ஆப் தி ஏப்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு மேக்கப் மேனாக வேலை செய்த கேவின் ஹானேவை ஒப்பந்தம் செய்தது.
அவரது ஆசோனையின் படி விஜய் சேதுபதியின் ஒப்பனை நடைபெற்றது. இந்தப் படத்துக்கு கேரளாவின் பிரபல இசைக்குழுவான "தைக்குடம் பிரிட்ஜ்" இல் இருந்த வயலின் இசைக்கலைஞர் கோவிந்த மேனன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.