”என்னை ஏன் ரீ ரிக்காடிங்க்கு கூப்பிடல?” - இளையராஜா மீது சீனு ராமசாமி பகீர் புகார்

”என்னை ஏன் ரீ ரிக்காடிங்க்கு கூப்பிடல?” - இளையராஜா மீது சீனு ராமசாமி பகீர் புகார்

”என்னை ஏன் ரீ ரிக்காடிங்க்கு கூப்பிடல?” - இளையராஜா மீது சீனு ராமசாமி பகீர் புகார்
Published on

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ செய்தியாளர் சந்திப்பில், அப்படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி, இளையராஜா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது கோலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இயக்குநர் சீனுராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகியுள்ள படம் ‘மாமனிதன்’. யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப் படம் பொருளாதார பிரச்சனையால், நீண்ட நாள்களாக ரிலீஸாகாமல் இருந்தநிலையில், வரும் 24-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் வெளியிடுகிறார்.

இந்தப்படத்தில் முதல்முறையாக இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர். இந்நிலையில் இந்தப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி, ‘மாமனிதன்’ படத்தின் பாடல் கம்போஸிங்கின்போது தன்னை இளையராஜா அழைக்கவில்லை என்றும், தன்னை நிராகரித்தார் என அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இயக்கு சீனுராமசாமி தெரிவித்ததாவது, “ இளையராஜா மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ‘மாமனிதன்’ படத்திற்கு முதுலில் இளையராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைக்க இருப்பதாக இருந்தது. அதன் பிறகு, என்ன காரணம் என தெரியவில்லை. கார்த்திக் ராஜா விலகிவிட்டார். நானும் அவரும் நல்ல நண்பர். ஆனால் அவர் விலகியதற்கான காரணம் எனக்கு தெரிவிக்கப்படவில்லை. நான் 80-ஸ் கிட். இசைஞானி இளையராஜா என்னுடைய கனவுலகத்தின் தூதர்.

நான் தாலாட்டு கேட்டதே அவரது ‘அன்னக்கிளி’ பட பாட்டாகத்தான் இருந்திருக்கும். ‘மாமனிதன்’ படத்தை யுவன் தயாரிப்பதால் ஒரு சிறந்த படமாகவும், அவர்கள் நினைவுகூறத்தக்க படமாகவும் இதை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து, கதைக்களத்தை பண்ணைப்புரத்திற்கு மாற்றினேன். இளையராஜா சார் வீடு இருக்கும் தெருவில்தான் கேமரா வைத்து முதல் ஷாட்டை எடுத்தேன். 37 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துக்கொடுத்தேன்.

இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தையும் நான் முன்னரே எடுத்துவிட்டேன். அதன் பிறகுதான் பாடல் உருவாக்கப்பட்டது. இந்தப் படத்தின் பாடல் உருவாக்கம், ரீரெக்கார்டிங் இரண்டிலுமே கலந்துகொள்ள நான் அழைக்கப்படவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதற்குக் காரணம் என்னவென்று எனக்குத் இன்னமும் தெரியவில்லை. ஆனால் இந்தப்படத்தின் ஒப்பந்தத்தின் போதே அவர்களுக்குப் பிடித்த கவிஞர்களுடன்தான் அவர்கள் வேலை செய்வார்கள் என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள். என் படத்தில் தொடர்ந்து வைரமுத்துதான் பாடல்கள் எழுதியுள்ளார். யுவன்சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் சேர்ந்துகூடத்தான் பாடல் எழுதியுள்ளார்கள்.

ஆனால் நான் மட்டும் ஏன் நிராகரிக்கப்பட வேண்டும். என்னை ஏன் அழைக்கவில்லை. நான் என்ன தப்பு செஞ்சேன்? இது என்ன நியாயம்? எனக்கு எவ்வளவு தவிப்பாக இருக்கும். பாடல் வரிகள் கூட எனக்குத் தெரியவில்லை. கவிஞர் பா.விஜய்க்கு போன் செய்து பாடல் வரிகளை எனக்கு அனுப்புங்கள் என்றால், ஏதோ கள்ளக்காதலியிடம் பேசுவது போல தயங்கித்தயங்கி பேசுகிறார். ஒருநாள் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கு ஒருவர் வந்து சார் நான் உங்க படத்துல பாட்டு எழுதியிருக்கேன் என்றார். எந்தப் படம் என்று கேட்டால் ‘மாமனிதன்’ என்றார். அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து, பாட்டு வரி அனுப்ப முடியுமா என்று கேட்டேன். பின்னர் அவர்தான் பாடல் வரிகளை எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பிவைத்தார்.

ஆனால், என்னை ஏன் அழைக்கவில்லை என்று பிறகுதான் தெரிந்தது. ரீ ரெக்கார்டிங்கிற்கு என்னை அழைக்காதது குறித்து யுவன் அலுவலகத்தில் கேட்டபோது, அங்கு இருந்த வினோத் என்பவர், கார்த்திக் சார் தான் இதுக்கெல்லாம் காரணம் என அவர் தெரிவித்தார். மேலும், நீங்கள் கார்த்திக் ராஜா சார் பெயரை போடாததால், அவரது தந்தை படத்தின் புரோமோஷன் விழாக்களில் கலந்துகொள்ள மாட்டார் என்றார் அவர். எனக்கு அது அதிர்ச்சி அளித்தது.

எனக்கும், அவருக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்டபோது, அவரது பெயரை தூக்கிட்டாங்களாம், அதனால் இளையராஜா சார் புரமோஷனுக்கு வரமாட்டாராம் என அவர் தெரிவித்தார். என் ராசா... இந்தப் பாடல் கடைசியில் எனக்குதானா ராசா என்று கேட்கத் தோனியது. நீங்களே 3 பேரும் இசையமைப்பதாக சொல்லிவிட்டு, நீங்களே அவரை தூக்கிவிட இதெல்லாம் நியாயமா?. பின்னர் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு இசையமைப்பாளர் வரலைனா கேவலம். போய் இசைஞானி காலில் விழுந்து விடலாம் வா சேது (விஜய் சேதுபதி) என்று கூப்பிட்டேன்.

அவருடன் இரண்டு போட்டோவாவது எடுத்து மீடியாவுக்கு கொடுக்கலாம் என்று கூறிவிட்டு, பாண்டிச்சேரி கிளம்பினோம். இளையராஜா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. எனது படங்கெளுக்கெல்லாம் அவர் தான் இசையமைக்க வேண்டும். ஆனால் ஒரு நிபந்தனை. ரீ ரிக்கார்டிங் போது என்னை கூப்பிட வேண்டும்” இவ்வாறு அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி உடன் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com