சாவித்திரியாக நடிக்க முதலில் மறுத்தேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, தமிழ், தெலுங்கில் உருவாகிறது. தமிழில் ’நடிகையர் திலகம்’ என்றும் தெலுங்கில் ’மகாநடி’ என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளன. ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். சமந்தா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உட்பட பலர் நடித்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதற்கிடையே படம் பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் கூறும்போது, ‘இந்தப் படத்தில் நடிக்க முதலில் வாய்ப்பு வந்தபோது ஏற்க மறுத்தேன். சாவித்திரி அம்மா, மிகப்பெரிய நடிகை. இந்த இளம் வயதில் அவர் கேரக்டரில் நடிக்க முடியுமா என்று பயந்தேன். அதைத்தாண்டி அவர் வாழ்க்கைச் சம்பவங்கள் எல்லாருக்கும் தெரியும். அதை நான் பண்ணும்போது ஏதாவது தப்பாயிடுமோ என்று நினைச்சேன். ஆனால், டைரக்டரும் தயாரிப்பாளரும் எனக்கு நம்பிக்கை கொடுத்தார்கள். பிறகுதான் நடிக்க சம்மதித்தேன்.
சாவித்ரியாக நடிப்பதற்காக அவர் நடித்த படங்களை பார்த்தேன். அவர் மகள் விஜயசாமுண்டீஸ்வரியை சந்தித்து, தகவல்களை சேகரித்தேன். அவருடைய பழக்க வழக்கங்கள், நடை, உடை, பாவனைகளை தெரிந்து கொண்டேன். இதில் சிறப்பாக நடிச்சிருக்கேன்னு நினைக்கிறேன். இதுல பல பார்ட் இருக்கு. முதல்ல இளமையா, பிறகு கொஞ்சம் முதிர்ச்சியா, அப்புறம் கொஞ்சம் குண்டா இருக்கிற மாதிரி நடிக்க வேண்டி இருந்தது. அதுக்காக நிறைய வொர்க் பண்ணியிருக்கிறேன். ’தொடரி’ படத்தைப் பார்த்துட்டுதான் இந்தக் கேரக்டருக்கு டைரக்டர் நாக் அஸ்வின் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கார். அவருக்கு நன்றி. இந்தக் கதையை மூணு மணி நேரம் சொன்னார். நான் எந்தக் கதையையும் இவ்வளவு நேரம் கேட்டதில்லை. இந்த யூனிட்ல வேலை பார்த்தது சிறப்பா இருந்தது’ என்றார் .