இந்தி சினிமாவின் 'நடன ராணி' சரோஜ் கான் 'பயோபிக்'... என்னென்ன எதிர்பார்க்கலாம்?

இந்தி சினிமாவின் 'நடன ராணி' சரோஜ் கான் 'பயோபிக்'... என்னென்ன எதிர்பார்க்கலாம்?
இந்தி சினிமாவின் 'நடன ராணி' சரோஜ் கான் 'பயோபிக்'... என்னென்ன எதிர்பார்க்கலாம்?
Published on

இந்தி சினிமா உலகின் முடிசூடா நடன ராணியாக இருந்து மறைந்த நடன இயக்குநர் சரோஜ் கானின் பயோபிக் படத்தை எடுக்க இருப்பதாக டி-சீரிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

பாலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான பூஷன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனம் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளது. இந்த முறை பாலிவுட்டின் புகழ்பெற்ற நடன இயக்குநர் சரோஜ் கானின் 'பயோபிக்' படத்தை எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது அந்த நிறுவனம். 'பயோபிக்' படத்திற்காக சரோஜ் கானின் வாரிசுகளிடமிருந்து முறையான அனுமதி பெற்று இருப்பதாக டி-சீரிஸ் நிறுவனம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், ''சரோஜ் ஜி தனது நடன அசைவுகளால் ரசிகர்களை மெய்மறக்க செய்தது மட்டுமில்லாமல் இந்தி சினிமாவின் நடனக் காட்சி அமைப்புகளில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார். அவரது நடன வடிவங்கள் ஒவ்வொரு திரைப்பட தயாரிப்பாளருக்கும் எப்படி உதவியது என்ற கதைகளை சொல்லும்.

தனது அசாத்திய நடனங்களை தங்களுக்கு பிடித்தமான நடிகர்களை ஆடவைத்து அவர்கள் மூலமாக, ரசிகர்களை தியேட்டர்களுக்கு அழைத்து வந்தவர் சரோஜ் ஜி. 3 வயதிலேயே தொடங்கிய சரோஜ் ஜியின் பயணம் நிறைய ஏற்றத் தாழ்வுகள் நிறைந்தது. அவர் சினிமாத் துறையில், பெற்ற வெற்றிகளையும் மரியாதையையும் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பயோபிக் படம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரோஜ் கானின் மகன் ராஜு கான், இது தொடர்பாக பேசும்போது, ''என் அம்மா நடனத்தை நேசித்தவர். அதற்காக தனது வாழ்க்கையை எப்படி அவர் அர்ப்பணித்திருக்கிறார் என்பது நமக்கு தெரியும். நானும் அம்மாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடன இயக்குநராக உள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சினிமா துறையில் மிகவும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட நபர். அப்படிப்பட்ட என் அம்மாவின் கதையை இந்தப் படம் மூலம் உலகம் காணப்போகிறது என்பது எங்களுக்கு கிடைத்த மரியாதை. இந்த படத்தை தயாரிக்க டி-சீரிஸ் நிறுவனம் முடிவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.

பாலிவுட் திரையுலகின் பிரபல நடன இயக்குநராகத் திகழ்ந்தவர் சரோஜ் கான். சரோஜ் கானின் இயற்பெயர் நிர்மலா. இந்துவாகப் பிறந்து பின்னர் இஸ்லாம் மதத்தைத் தழுவிய இவர், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது சரோஜ் கானின் பெற்றோர் இந்தியாவுக்கு குடிவந்தனர். தனது சிறுவயதில் திரைப்படங்களில் நடித்த சரோஜ் கான் பின்னர் நடனக்குழுவில் பணியாற்றினார். 1974-ம் ஆண்டு 'கீதா மேரா நாம்' எனும் திரைப்படத்துக்கு நடன இயக்குநராக சரோஜ் கான் அறிமுகமானார்.

என்றாலும், 1987-ல் அனில் கபூர், ஸ்ரீதேவி நடித்து வெளியான "மிஸ்டர் இந்தியா" திரைப்படம்தான் சரோஜ் கானுக்கு பெரும் புகழைச் சம்பாதித்துக் கொடுத்தது. அதில் இடம்பெற்று 'ஹவா ஹவா', "தக் தக் லகா" ஆகிய பாடல்களுக்கு சரோஜ் கான் இயக்கியிருந்த நடன அசைவுகள் பலரையும் கவர்ந்தது. இதனையடுத்து மாதூரி தீக்‌ஷித் நடித்த பிரபல பாடலான "ஏக் தோ தீன்" பாடலின் நடன அசைவுகள் இப்போதும் பெரும் புகழ்பெற்றவை. தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'தாய் வீடு' படத்தில் இடம்பெற்ற 'உன்னை அழைத்தது கண்' பாடலுக்கு நடனம் அமைத்தவரும் இவர்தான். இதுபோக இருவர், 'சிருங்காரம்' உள்ளிட்ட படங்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.

இதில் 'சிருங்காரம்' படத்துக்கு நடனம் அமைத்ததற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 2,000 பாடல்களுக்கும் அதிகமாக நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பாலிவுட் நடிகர்கள் மத்தியில் 'மாஸ்டர்ஜி' என்ற அடைமொழியுடன் சரோஜ் கான் அழைக்கப்பட்டார். மூன்று முறை தேசிய விருதுகளை வென்ற சரோஜ் கான், 2020 ஜூலையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com